சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய கே.பார்த்தசாரதி கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் ஒய்வுபெற்றார்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பிச்சுமணி, முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கருத்தையா பாண்டியன் ஆகியோர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பரிந்துரை செய்த 3 பேரில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.ஆறுமுகத்தை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் ஆசிரியப் பணியில் 25 ஆண்டுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
இதேபோல, கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலை.யின் துணைவேந்தராக கே.கலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 34 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் அனுபவமும், 8 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாக அனுபவமும் கொண்டவர்.
இவர்கள் இருவரும் அடுத்த 3 ஆண்டுகள் துணைவேந்தராகப் பொறுப்பு வகிப்பார்கள். இருவருக்கும் பணிநியமன ஆணையை, பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி நேற்று வழங்கினார்.