புதுடெல்லி: அனைவருக்கும் முதலில் நாடு என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார். 2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின்(என்சிசி) குடியரசு தின முகாம், டெல்லியில் கண்டோன்மென்ட், கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கியது. பிரதமரின் பேரணியோடு ஜனவரி 28-ஆம் தேதி நிறைவடையும். இந்த ஒரு மாத கால முகாமில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 710 பெண்கள் உட்பட மொத்தம் 2155 பேர் பங்கேற்கின்றனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 114 தேசிய மாணவர் படையினரும், வடகிழக்கு பகுதியிலிருந்து 120 பேரும் இதில் அடங்குவர்.
தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ நாட்டின் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா காலத்தில் நாம் இருக்கிறோம். அனைவருக்கும் முதலில் நாடு என்ற எண்ணம் உருவாக வேண்டும். இதுவரை இல்லாத வகையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்’’ என்றார்.