பயம் இல்லாமல் பால் அபிஷேகம்… துணிவு படத்தை துணிவுடன் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

Thunivu Movie Celebration : தமிழ் திரையுலகில் நாயகர்கள் இடையே போட்டி என்பது இயல்பானதுதான். அந்த காலத்தில் தியாகராஜ பாகவதர் – கிட்டப்பா, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்ற போட்டி தற்போது அஜித் – விஜய் என ரசிகர்கள் இடையே போட்டி உச்சத்தை அடைந்துள்ளது. 

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் இரு தரப்புக்கும் இடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வெளியாகின்றன. 

முதலில் இரு படங்களும் ஜன. 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜன. 11ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் திரையரங்குகளில் வெளியாகும் என இரு படக்குழுக்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் நிலையில், வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில இடங்களில் வெளியீடு உரிமைகளை அந்த நிறுவனமே கைப்பற்றியுள்ளது. 

இதனால், படத்தின் தியேட்டர் ஒதுக்கீடு, காட்சிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேள்விகள் எழுந்தது. இதனையடுத்து, முதல் நாள் (ஜன. 11) முதல் காட்சி, துணிவு படத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் வெளியாகும் என தகவல் வெளியாக உள்ளது. அதன்பின், இரு படங்களுக்கும் சமமான முறையில் முதல் 5 நாள்கள் காட்சிகள் ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இன்னும், நான்கு தினங்களே உள்ள நிலையில், ரசிகர்கள் தங்கள் நாயகர்களுக்கு பேனர் வைப்பது முதல் தியேட்டரில் அலங்காரம், முதல் நாள் முதல் காட்சியின் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை தொடங்கியுள்ளனர்.  

அந்த வகையில், புதுச்சேரி நகர மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்குகளிலும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இதனையொட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுவதும் அஜித் – விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர். நகரின் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட் – பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தரப்பும் தங்கள் விருப்ப நாயகர்களை உயர்த்தி பிடிக்கும் வாசகங்கள் இடம் பெறும் வகையில் பேனர்கள் வைத்து வருகின்றனர். இதில், உச்சகட்டமாக அஜித் ரசிகர்கள் 50 அடி மற்றும் 55 அடி கட் அவுட் நகரப் பகுதியில் வைத்து அசத்தியுள்ளனர். மேலும் கட்டவுட் மீது ஏறி பயமில்லாமல் பாலபிஷேகம் செய்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.