தாம்பரம்: போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் பழைய பொருட்களை எரிக்காமல் மாநகராட்சியிடம் அளிக்கலாம் என்று தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் , ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இதற்காக இடம் தேர்வு செய்து பழைய பொருட்களை வாங்க தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. நமது சுற்றுச்சூழலும், காற்றும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பும், கடமையும் ஆகும். எனவே, மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கி புகையில்லா மற்றும் காற்று மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.