சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் பரவி வருகின்றன.
அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, “பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்பது எங்களுக்கும் விருப்பம்தான். ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை” என்றார். அதேநேரத்தில், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கடந்த முறையே மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்தோம். வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது உண்மையாகக்கூட இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ராமநாதபுரத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் பரவியது. அப்போதிருந்தே மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தை மோடி குறிவைத்துள்ளார் என்ற தகவல்கள் கிளம்பிவிட்டன.
மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், ராமநாதபுரத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் விவாதங்கள் நடக்கின்றன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வாரணாசி தொகுதி மக்களவை உறுப்பினர். வாரணாசி (காசி) இந்துக்களின் புனித நகரம். நாட்டில் பல்வேறு மொழி வேறுபாடுகள் இருந்தாலும், காசியும், ராமேசுவரமும் பிணைந்திருப்பவை.
எனவே, வரும் மக்களவைத் தேர்தலில், காசியுடன், ராமசுவரம் அடங்கியுள்ள ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு, இந்தியர்களின் ஒற்றுமையை மேலும் வளர்த்து, வட இந்தியா, தென் இந்தியா உறவை வலுப்படுத்தப்படுத்த மோடி வியூகம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொழில் வளர்ச்சி இல்லாத ராமநாதபுரத்துக்கு அண்மையில்தான் மருத்துவக் கல்லூரி கிடைத்தது. இதை வைத்துப் பார்க்கும்போது, பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டு, தமிழக அரசியலில் புதிய அத்தியாத்தை எழுதுவார் என்றும் கூறப்படுகிறது.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் பேசிய பிரதமர், காசிக்கு விஸ்வநாதர், தமிழகத்துக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி பெருமை சேர்ப்பதாகப் பேசியிருந்தார்.
ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், ராமர் சேதுவை தனது அரசியல் பிரச்சாரத்தின் மையத் தூணாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் 44 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் 32.2 சதவீத வாக்குகள் பெற்றார். இந்நிலையில், அதிமுகவுடன் எப்படியும் கூட்டணி சேர்ந்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக உறுதியாக இருக்கிறது.
அதேநேரத்தில், தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுகவையும், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து ஒன்றுபட்ட கட்சியாக கூட்டணி அமைத்து, வாக்குகளை முழுமையாகப் பெற வேண்டுமெனவும் பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் மோடி போட்டியிடுவது உறுதியானால், அதிமுகவை ஒன்றிணைப்பதில் பாஜக பங்கும் பெருமளவு இருக்கும். அதேபோல, ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால், தொகுதிப் பங்கீட்டில் பாஜகவின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும். மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மோடி மூலம் நிரப்புதவற்கும் பாஜக திட்டமிட்டுள்ளது.
தமிழக தேர்தல் வரலாற்றை மாற்றி எழுத மோடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும். எனவே, அவர் ராமநாதபுரத்தில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்றும் பாஜகவினர் கூறுகின்றனர். அதேசமயம், பாஜகவினரின் இந்த பகல் கனவு பலிக்காது என்றும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.