லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. வடமாநிலங்களில் கடும் குளிர்வாட்டி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போருக்கு நிரந்தர தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில், கான்பூரில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக வியாழக்கிழமை (5ம்தேதி) 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடும் குளிரால் ரத்த அழுத்த அதிகரிப்பு மற்றும் ரத்த உறைவதால் ஏற்படும் மாரடைப்பு, மூளை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை. பேராசிரியர்; இந்தக் குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்று கருதக்கூடாது. மாரடைப்புக்கு உள்ளான சிறுவர்களும் எங்களிடம் வந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.