விர்ஜினியா :அமெரிக்காவில், 6 வயது பள்ளி மாணவன், வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள நியூ போர்ட் நியூஸ் நகரத்தில் உள்ள ரிச் நெக் என்ற துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டான். இதில் 30 வயதான அந்த ஆசிரியை படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீசாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அந்த சிறுவனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, எதற்காக ஆசிரியையை சுட்டான் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் பிற மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை’ என்றார்.
சமீபகாலமாகவே அமெரிக்க பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. இதுவரை நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களே இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது ஆரம்ப பள்ளி படித்த மாணவனே, துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி விற்பனைக்கு சமீப காலமாக அமெரிக்காவில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக பலரும் கவலை தெரிவித்து உள்ளனர்.
எனவே, துப்பாக்கி விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement