புதுடெல்லி: “இந்தியா மென்பொருள் துறையில் தன் திறனை உலகுக்கு நிருபித்துள்ளது. இனி, மென்பொருள் தயாரிப்புகளில் உலகின் மையமாக மாற இந்தியா முயல வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று 7-வது ஆண்டு ‘டிஜிட்டல் இந்தியா விருதுகள்’ விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திரவுபதி முர்மு இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினார்: “தொழில்நுட்பக் கட்டமைப்பு ரீதியாக இந்தியா உலகின் முக்கிய நாடாக வளர்ந்துள்ளது. மக்கள் நலனை மையப்படுத்திய தொழில்நுட்பக் கட்டமைப்பை இந்தியா உருவாக்குகிறது.
கரோனா காலத்தில் நெருக்க டியான சூழலை இந்தியா அதன் தொழில்நுட்பம் வழியாக திறம்படக் கையாண்டது. நாம் மென்பொருள் துறையில் நமது திறனை உலகுக்கு நிருபித்துள்ளோம். இனி, மென்பொருள் மற்றும் கணினி சாதனங்கள் உருவாக்கத்தில் உலகின் மையமாக நாம் மாற வேண்டும். இதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
மிகச் சிறப்பான டிஜிட்டல் கட்டமைப்பை நம் நாடு கொண்டிருக்கிறது. உலக அரங்கில் நம் நாட்டின் மதிப்பை அது உயர்த்தியுள்ளது. ஜி20-க்கு நாம் தலைமையேற்றிருக்கும் இந்தத் தருணத்தில், நமது டிஜிட்டல் கட்டமைப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது 5ஜி சேவையை நம் நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நம் நாட்டின் நிர்வாக முறையை முற்றிலும் நவீன தளத்துக்கு மாற்றி அமைக்கும். அரசு தரவுகளை நாம் ஜனநாயகப்படுத்த வேண்டும். இளம் தலைமுறையினருக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் அரசு தரவுகளைக் கொண்டு உள்ளூர் அளவில் டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவார்கள்” என்று தெரிவித்தார்.