கந்தர்வகோட்டை: இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் நேற்று நடந்தது. இதில் 500 காளைகள் சீறப்பாய்ந்தது. காளைகள் முட்டி 70 வீரர்கள் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் சார்பில், தமிழகத்தில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 8.20 மணிக்கு துவங்கியது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது.
டாக்டர்கள் குழுவினர் காளைகளுக்கு பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் 500 காளைகள், 237 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி வாசிக்க, அதனை வீரர்கள் ஏற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து புனித அடைக்கல அன்னை தேவாலய காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
இதில் சில காளைகள், வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக களத்தில் நின்று விளையாடியது. பல காளைகளை வீரர்கள் அடக்கினர். ஒரு காளையுடன், 2 பேர் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 8.30 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு பிற்பகல் 2 மணிக்கு முடிந்தது. காளைகள் முட்டியதில் 70 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 11 பேர், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பைக், கட்டில், மிக்சி, சேர் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.