பா.ஜ.க மீது பாய்ச்சல், நடிகர் விஜய் குறித்து கருத்து, முன்னாள் தம்பி இராஜீவ் காந்திக்கு தி.மு.க பதவி கொடுத்ததன் மீது விமர்சனம், கனிமொழிக்கு முதல்வர் பதவி கேட்டு சிபாரிசு என்று நாலாபுறமும் சுழன்றடிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். நேர்காணலுக்காக அவரது சென்னை, பாலவாக்கம் இல்லத்தில் அவரைச் சந்தித்து… பல கேள்விகளை முன்வைத்தேன்.
“ஏற்கெனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு, மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு இருக்கும்போது ‘குடிவாரி கணக்கெடுப்பு’ தேவையின் அவசியம் என்ன?”
“தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது எடுக்கப்பட்டது. அதில் குடிவாரியாக எடுத்தார்களா. இங்கு சாதியை ஒழித்து சமத்துவம் பிறக்க வேண்டுமென்றால் அவரவருக்கானதை, அவரவருக்குக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் போட்டியே வராது, ஏற்றதாழ்வும் இருக்காது. இட ஒதுக்கீடு என்பதைவிட, இட பங்கீடு என்பதுதான் பொறுத்தமானது. அதனால்தான் எடுத்துக் கொடுப்பது ஏமாற்றுவேலை, எண்ணிக் கொடுப்பதே சரியானது என்கிறோம். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை, இவர்கள் பின்பற்றுவதாகச் சொல்லும் ஐயா பெரியாரே ‘ஒருவன் தன் வகுப்பாறுக்கு ஏற்ற விகிதாச்சாரத்தை பெறவில்லை என்றால், அவன் மானம் இழந்தவன்’ என்கிறார். அதையாவது நடைமுறைப்படுத்த முன்வர வேண்டாமா?”
“ஆனால், ‘இட ஒதுக்கீட்டில் தமிழகம்தான் முன்னணி மாநிலம், சமூக நீதிக்கு இங்குதான் பாதுகாப்பு’ என்கிறார்களே?”
“எப்படி… இன்று வரை ஆதி திராவிடர் நலத்துறையில், ஆதி திராவிடருக்கு மட்டுமே கொடுப்பதுதான் சமூகநீதியா? விகிதாச்சாரத்தையே பின்பற்றாமல் அமைச்சரவரையில் ஒன்பது தெலுங்கு அமைச்சர்கள் இருப்பதுதான் இட ஒதுக்கீடா? இப்படியே பட்டியல் நீட்டிக் கொண்டே போகலாம். ஏன் சமீபத்தில் தண்ணீர் தொட்டியில் நடந்த தீண்டாமைக்கு ஒரு கண்டன அறிக்கையாவது விட்டிருப்பார்களா இந்த ஆட்சியாளர்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்டவனது வாக்கை அண்ணன் திருமாவளவன் கொண்டு பெற்றுக்கொள்ளலாம். ஆனால், எதிர்தரப்பு வாக்குகளின் வாய்ப்பு… இதுதான் இங்கு சிக்கல். எனவே பெரியரை பேசுகிறோம், சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு பேசுகிறோம் என்று வெற்று விளம்பர ஆட்சியாக இல்லாமல், மக்களுக்கான நல்லாட்சியை கொடுங்கள். இல்லையென்றால் மூட்டையை கட்டிக் கொண்டு போங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”
“ `ஒரு கோடி வாக்கு இலக்கு…’ என்கிற பயணத்தை எந்த நம்பிக்கையில் தொடங்கியிருக்கிறீர்கள்?”
“ஏன்… ஒன்றரைக் கோடி என்றால் வாங்க மாட்டோமா… ஒரு கணக்குக்காக இலக்கு தீர்மானித்துக் கொண்டு பயணிக்கிறோம். இந்த இலக்கை அடைவதற்கு நான் மட்டும் முடிவு செய்தால் போதாது. மக்களின் முடிவிலும் இருக்கிறது. மற்ற கட்சிகள் போல் காசு கொடுத்து வாக்கு வாங்கும் கட்சி நாம் தமிழர் இல்லை. எனவே மக்களின் நன்மதிப்பை பெற்று அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்க நாங்களும் நிறைய உழைக்க வேண்டும்”
“மாற்று கட்சியினரை வாரிசு அரசியல் என்று விமர்சிக்கும் உங்களிடம், ‘நாம் தமிழர் கட்சியில் வாரிசு அரசியல்’ இருக்கிறது என்று கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் நீங்கள் நடந்து கொண்டது சரியா?”
“கேள்வி கேட்டால்தானே பதில் சொல்ல முடியும். சும்மா எதையாவது ஒன்று பேசி விதண்டவாதம் செய்தால் அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும். வாரிசு என்றால் என்னவென்றே தெரியாமல் கேள்வி கேட்டால்?”
“அப்போது வாரிசுக்கு உங்கள் வரையறை. ரத்த சொந்தத்தில் ஒருவர் வருவதும் வாரிசுதானே?”
“ஐயா துரைமுருகன் அமைச்சர், அவருடைய மகன் தம்பி கதிர் ஆனந்த் எம்.பி., ஐயா டி.ஆர்.பாலு எம்.பி., அவருடைய மகன் தம்பி ராஜா எம்.எல்.ஏ., ஐயா ஐ.பெரியசாமி அமைச்சர், தம்பி செந்தில் எம்.எல்.ஏ., ஐயா பொன்முடி அமைச்சர்., தம்பி கௌதம சிகாமணி எம்.பி., ஐயா கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின், இப்போது உதயநிதி… இதுதான் வாரிசு அரசியல். வம்பா குதர்க்கமா பேசக்கூடாது. அதனால்தான் கோபம் வருகிறது. மற்றவர்கள் எல்லாம் மக்கள் பிரச்னை பற்றி உருப்படியாக கேள்வி கேட்கையில், அவர் மட்டும் தொடர்ந்து இப்படியே நடந்து கொண்டிருக்கும் போதுதான் அப்படி பேச வேண்டியிருக்கிறது”
“ ‘நாம் தமிழர் கட்சி என்றால் சீமான்… சீமான் என்றால் நாம் தமிழர் கட்சி… கட்சியில் வேறு யாருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்கிறார்களே?”
“இது நாம் தமிழர் கட்சியில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அப்படித்தான். ரஷ்ய விடுதலை என்றால் லெனின், ஸ்டாலின் பெயர்கள்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், அவர்கள் மட்டும்தான் போராடினார்களா. இந்திய விடுதலைக்கு எத்தனையோ பேர் போராடினாலும், காந்தி, நேதாஜி, பகத்சிங், வா.உ.சி என சில பேர்தான் அடையாளமாக இருக்கிறார்கள். தற்சமயம் சேர்ந்து போராடுகிறோம். அதில் யாரவது ஒருத்தரை பேச அழைக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். ஆயிரம் பேர் அமர்ந்து செல்லும் கப்பலாக இருந்தாலும் ஒரு மாலுமிதான் அதை ஓட்டுவார். அப்படித்தான் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின். எனவே இதுபோல் என் மீது, ‘இப்படியே நீ இருந்தீன்னா… உன் கேடர்ஸ் எல்லாம் சோர்ந்துடுவாங்க, போய்டுவாங்க’ என்று வயிற்றெரிச்சலில் கொட்டும் வார்த்தைகள் இதெல்லாம். இந்த விதை முளைக்கவில்லை என்றால் இன்னும் கைகளில் நிறைய விதைகள் இருக்கின்றன. நான் விதைத்துக் கொண்டே இருப்பேன்”