பெ.நா.பாளையம்: கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை வீதிகளில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம் பெரியதடாகம், மருதமலை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று, ஊருக்குள் புகுந்தது. பின்னர், தனியார் திருமண மண்டபம் அருகே தண்ணீர் தொட்டிக்கு சென்று தண்ணீர் பருகியது. இதன்பிறகு, அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் சென்று வாழை மரங்களை முறித்து வீசியது. இதற்கிடையே, குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி வனத்துறையினர் வந்து யானையை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டினர்.
இந்நிலையில், பெரியதடாகம் அருகே அணுவாவி சுப்பிரமணியர் கோவில் வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் அதே ஒற்றை ஆண் காட்டு யானை கணுவாய் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. திருவள்ளுவர் நகர் வழியாக கணுவாய் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். திடீரென வந்த யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்த கடைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். கணுவாய் ஆனைகட்டி சாலையில் அரை மணி நேரம் சுற்றி வந்த யானையை வனத்துறையினர் பட்டாசுகளை வனத்திற்குள் விரட்டினர்.