சீமான் அண்ணாவின் கோபம் சரிதான்.. சினிமாக்கு ரொம்ப டைம் ஒதுக்காதீங்க… துணிவு இயக்குனர் பளீச்

சினிமா மோகமானது எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த மோகம் அவர்களை சமூக பொறுப்பு, அரசியல் புரிதலில் இருந்து வேறு பாதைக்கு திசை திருப்பி சுய வளர்ச்சிக்குக்கே தடையாக இருப்பதாக அரசியல் ஆளுமைகள் வேதனை தெரிவித்து வருவதுண்டு. ஆனால், ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்களது ரசிகர்களுக்கு அதுகுறித்து அறிவுரை வழங்குகின்றனர்.

ஆனால், அந்த அறிவுரைகூட அந்த நடிகர்கள் மேல் இருக்கும் அன்பை மேலும் அதிகரிக்குதே தவிர என்ன சொல்ல வருகின்றனர் என்பதை இளைஞர்கள் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை. தற்போது வாரிசு, துணிவு என்ற இரண்டு மெகா ஸ்டார்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது. இவ்விரண்டு திரைப்படங்களை குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளுக்கும் ரசிகர்கள் இரவு பகலாக காத்துக்கொண்டிருப்பதும், சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொள்வதையும் பார்த்துவருகிறோம்.

இதற்கு மத்தியில் இரு படங்களும் பெரிய வசூலை எதிர்நோக்கியுள்ள நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் எச். வினோத் வெளிப்படையாக தனது ஆதங்கத்தை கூறி கவனத்தை ஈர்த்துள்ளார். சினிமா விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்; டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் காட்டும் அர்ப்பணிப்பும், அவர்கள் ஒதுக்கும் நேரமும்தான் அந்த படத்தின் மிக பெரிய ப்ரோமோஷன். அந்த படத்தை குறித்து அவர்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கு விலையே கிடையாது. 100 கோடி செலவு செய்தாலும் அது போன்ற ப்ரோமோஷனை பண்ண முடியாது. இப்படி இருக்கும் ரசிகர்களின் மனதில் பெரிய எதிர்பார்ப்பு எழும். ஆனால், அதற்காக அந்த நடிகராலோ அல்லது படக்குழுவினராலோ திரும்ப உங்களுக்கு ஒண்ணுமே செய்ய முடியாது.

ஏனென்றால் நீங்கள் ஒரு படத்துக்கு ஒதுக்கும் நேரத்தை மதிப்பிடவே முடியாது. அவ்வளது நேரத்தை நீங்கள் ஒதுக்குகிறீர்கள். இதனால்தான்
சீமான்
, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உங்களை விமர்சிக்கின்றனர். சினிமா மோகம் இருக்க வேண்டும்தான் ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றால் மூன்று நாட்களுக்கு முன்பு டிக்கெட் புக்கிங் தொடங்கும். அப்போது உங்களுக்கு எந்த படத்தின் டிரெய்லர், போஸ்டர் பிடித்திருந்ததோ அந்த படத்துக்கு டிக்கெட் வாங்கி பாருங்கள். அந்த படம் நல்லா இருந்தா மத்தவங்களுக்கு சொல்லுங்க. இல்ல வேற படம் நல்லா இருந்தா அந்த படத்தை பார்க்க சொல்லலாம். ஒரு சினிமாவுக்கு நீங்கள் செலவு பண்ண வேண்டிய நேரம் அதுதான்.

ஆனால், நீங்கள் ஒரு படத்தின் தலைப்பு வெளியாகுவதற்கு முன்பு இருந்தே உங்களது நேரத்தை செலவு செய்ய தொடங்கி விடுகிறீர்கள். உங்கள் நேரத்தை உங்களை விட வேற யாரும் சிறப்பாக செலவிட முடியாது. அதேபோல உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய உங்களால் மட்டுமே முடியும். அது ஒரு இயக்குனராக என்னால்கூட முடியாது. எனக்கு தெரிந்த விஷயங்களை வைத்து நான் ஒரு படத்தை எடுப்பேன். உங்களுக்குள் இருக்கும் திறமையை நீங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்” என இவ்வாறு இயக்குனர் எச். வினோத் அறிவுரை வழங்கியுள்ளார்.

எச். வினோத்தின் இந்த பொறுப்பு மிகுந்த பேச்சை அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.