தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்ற தகுதியற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி: திருமாவளவன் பேட்டி

தூத்துக்குடி: சட்டமன்றத்தில் உரையாற்ற தகுதியற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  ஆளுநர் ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும் என சாடினார். மேலும் தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை பேசி வருகிறார் என்றும், தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை என கூறிய அவர், இப்படிபட்ட ஒருவர் சட்டப்பேரவையில் நாளை  உரையாற்றுவது எந்த வகையில் பொருத்தம் என கேள்வி எழுப்பினார். திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல என  விமர்சித்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மனித மலத்தை கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். முதல்வர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். அவர்களை கைது செய்யக்கோரி வருகிற ஜனவரி 11ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.