திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அந்த வகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்க வசதியாக திருமலையில் 7,000 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. அறைகளின் வசதிக்கு ஏற்ப அதற்கான வாடகை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, சேதமடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் திருமலை தேவஸ்தானம் சார்பில் அண்மையில் சீரமைக்கப்பட்டன.
இந்த நிலையில், திருப்பதி திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கவுஸ்தபம், நந்தகம், பாஞ்ச ஜன்யம், வகுலமாதா தங்கும் அறைகள் வாடகை ரூ.600 லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், நாராயணகிரி தங்கும் விடுதிகளில் ரூ. 150 லிருந்து ரூ. 750 ஆக வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது. நாராயணகிரி- 4 விடுதிகளில் ஒவ்வொரு அறையும் ரூ.750 இல் இருந்து ரூ. 1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், கார்னர் சூட் வாடகை ரூ. 2,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்பெஷல் டைப் காட்டேஜ் வகைகள் ரூ. 750இல் இருந்து ரூ. 2,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 50 வாடகைக்கு விடப்படும் எஸ்.எம்.சி, எஸ்.என்.சி, ஏ.எஸ்.சி, எஸ்.வி.சி போன்ற விடுதிகள் மற்றும் ரூ.100 வாடகை பெறப்படும் ராம்பக்கீச்சா, வராக சுவாமி, எஸ்என்ஜிஎச், எச்விடி, சிஏடிசி, டிபிசி, சப்தகிரி வாடகை விடுதிகளின் வாடகையும் பன் மடங்குஉயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
அறைகளின் வாடகை எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவஸ்தான தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேவஸ்தான நிர்வாக கட்டிட அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறைகளின் வாடகையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகன கட்டணம், திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் பேருந்து கட்டணம், லட்டு, வடை பிரசாத விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்டன என்பது கவனித்தக்கது.