தி.மு.க., ஆட்சிக்கு வராவிட்டால், இவருக்கு நல்லது தானே… ஏன், வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துறாரு?| Speech, interview, report

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:

ஏமாற்றுவது, தி.மு.க.,வின் சுபாவம். தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு, இன்று தடுமாறுகின்றனர். அரசு ஊழியர்கள், நர்ஸ்கள், ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். ஆட்சி அதிகாரம் இருந்தால் போதும் என்று, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். இதே நிலை நீடித்தால், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வராது. எனவே, தேர்தல் வாக்குறுதிகளையாவது உண்மையாக நிறைவேற்ற வேண்டும்.

தி.மு.க., ஆட்சிக்கு வராவிட்டால், இவருக்கு நல்லது தானே… அப்புறம் ஏன், வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வலியுறுத்துறாரு?

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அறிக்கை:

‘தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், கூட்டத்தை புறக்கணியுங்கள்’ என, பத்திரிகையாளர்களுக்கு, தமிழக சட்டசபை காங்., தலைவர் செல்வப் பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார். இவருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. இது, 1975ம் ஆண்டு எமர்ஜன்சி காலத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இது தான், காங்., கட்சியின் ஜனநாயகமாக அல்லது பத்திரிகையாளர்களுக்கு விடும் எச்சரிக்கையா? எதுவாக இருந்தாலும், சம்பந்தம் இல்லாத விஷயத்தில், ஆளுங் கட்சியின் ஆதாயம் கருதி வெளியிடப்பட்டிருக்கும், அரைவேக்காட்டு அறிக்கை கண்டிக்கத்தக்கது.

‘எமர்ஜன்சி’ காலத்துல எல்லாம், செல்வப்பெருந்தகை எங்க இருந்தாருன்னே தெரியாது… அவரது கூட்டணி கட்சியான, தி.மு.க.,வினரிடம் கேட்டா, பக்கம் பக்கமா சொல்லுவாங்க!

மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் முரளி அப்பாஸ் அறிக்கை:

பள்ளிகளில் தமிழை ஒழித்து விட்டு, வீதிகளில் அதற்கு விழா கொண்டாடி என்ன பயன்? ஜாதிகளின் மக்கள் தொகையை கணக்கெடுக்க கோரும் தலைவர்கள், இன்றைய இளைஞர்களில், எத்தனை பேருக்கு தமிழ் வாசிக்க தெரியும் என்று கணக்கெடுக்க சொல்வரா?

அதைப்பற்றி அவங்களுக்கு என்ன கவலை… ஏதாவது விழாக்களை கொண்டாடி, ‘லைம் லைட்’லயே வண்டியை ஓட்டணும், அவ்வளவு தான்!

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:

தமிழகத்தில் பிரிவினைவாதம், பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஆதரவான சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு, வி.சி., கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறது. தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் எனில், ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், கோவையில் அமித் ஷாவும், போட்டியிட வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம்.

latest tamil news

இவரது கோரிக்கையை பார்த்து, பா.ஜ.,வினரே, ‘நமக்கு கூட இது தோணாம போயிடுச்சே’ன்னு ‛’நறநற’ன்னு பல்லை கடிச்சிட்டு இருக்காங்க!

பன்னீர்செல்வம் அணியின், அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை:

ஒரு கட்சியை அபகரிக்க முயற்சிக்கும், பழனிசாமியின் ஜனநாயக விரோத செயலை, உச்ச நீதிமன்றம் மூக்கறுக்க வேண்டும் என்பதே, அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். அது நடக்காது போனால், அனேக கட்சிகளை அபகரிக்க, நாடெங்கும் ஏகப்பட்டவர்கள் பணப் பெட்டிகளோடு புறப்பட்டு விடுவர். அத்தகைய சூழலை கற்பனையிலும், நம் உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்பதே, என் அசைக்க முடியாத நம்பிக்கை.

வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கணும் என, உச்ச நீதிமன்றத்துக்கே, ‘லீடு’ எடுத்து கொடுப்பது சரியா?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

‘தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளின் மது விற்பனை நேரத்தை, ஆறு மணி நேரமாக குறைக்க வேண்டும். மது குடிக்க உரிமம் பெறும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது; இது, வரவேற்கத்தக்கது. எனவே, உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, பிற்பகல், 2:00 முதல் இரவு 8:00 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க வேண்டும்.

latest tamil news

‘மதுக் கடைகளை அறவே மூடணும்’ என முழங்கிய ராமதாசே, நேரத்தை குறைச்சா போதும்னு இறங்கி வந்துட்டாரே… எல்லாம், கூட்டணி பேச்சு செய்யும் மாயம் போல!

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிக்கை:

அரசை குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தில், கரும்பு கொள்முதல் பற்றி, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 2021ல் பொங்கலுக்கு கரும்புக்கான விலையாக, அனைத்து செலவுகள் சேர்த்து, 30 ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டது. தற்போது, 33 ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. இது, அ.தி.மு.க., ஆட்சி அறிவித்த கொள்முதல் விலையை விட அதிகம்.

இவங்க அறிவித்துள்ள, ‘எக்ஸ்ட்ரா’ 3 ரூபாய், வண்டி வாடகைக்கே போயிடும் என்பது தெரியாதா?

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:

அற்புதங்கள் பல செய்த திருஞானசம்பந்தரை, அமைச்சர் துரைமுருகன் கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். ஹிந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசி இருக்கிறார். முதல்வரின் துாக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பேசி இருக்கிறார். அன்பழகன் நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், இதை பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது. இதேபோன்று பிற மத கடவுள்கள் குறித்து பேச, துரைமுருகனுக்கு துணிச்சல் கிடையாது. அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

தனக்கு ஆட்சியில முக்கியமான துறைகளை தராத முதல்வரை, நிம்மதியாக துாங்க விடக்கூடாது என, துரைமுருகன், ‘ரூம்’ போட்டு யோசித்திருப்பாரோ?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.