சென்னை காசி திரையரங்கில் ‘வாரிசு’, ‘துணிவு’ திரைப்படங்களின் ரசிகர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்க வந்த ரசிகர்கள், டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’, நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 11-ம் தேதி வெளியாக உள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படங்களை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல் நாளிலேயே பார்க்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘வாரிசு’, ‘துணிவு’ திரைப்படங்களில் இணையதள டிக்கெட் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இணையதள டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கினர். மேலும் இந்தப் படங்களின் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
இந்த சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக 1000 முதல் 2000 வரையில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாம். இந்த நிலையில், ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களின் FDFS காட்சிக்கு டிக்கெட் வாங்க காசி திரையரங்கம் முன்பு இன்று காலை ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் ‘FDFS காட்சி டிக்கெட்டுகள் விற்பனை இல்லை, முடிந்துவிட்டது’ என்று திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ரசிகர்கள் டிக்கெட் வாங்கி அதிகாலையிலே படத்தை பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால் டிக்கெட் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். அதேபோல ஜனவரி 11 ஆம் தேதி வழக்கமான காட்சிகளும் கூட இணைய வழியில் டிக்கெட்டுகள் விற்பனை முடிந்ததால் அடுத்த நாள் டிக்கெட்டுதான் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கூறினார்.