'துணிவு, வாரிசு' அதிகாலை காட்சிக் கட்டணம் 1000 ரூபாய்?

2023 பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு', விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் அதற்கான அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்துவதற்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.

'துணிவு' படத்திற்கு நடுஇரவு 1 மணிக்கும், 'வாரிசு' படத்திற்கு விடியற்காலை 4 மணிக்கும் காட்சிகளை நடத்துகிறார்கள். இரண்டு படங்களுக்குமான குறைந்தபட்சக் கட்டணம் 1000 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். 8 மணி காட்சிகளிலf இருந்துதான் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை வாங்க தியேட்டர்கள் முடிவு செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

'துணிவு' படத்தை திமுக அமைச்சர் உதயநிதி குடும்பத்திற்குச் சொந்தமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'வாரிசு' படத்தை சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, கோவை ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

அமைச்சராகப் பொறுப்பேற்தற்கு முன்பு வரை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் என்ற பெயரில்தான் விளம்பரங்கள் வரும். அவர் அமைச்சராக ஆன பின்னும் அவர் கவனித்து வந்த நிறுவனம் சார்பில் முக்கிய படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கும் போது இப்படி அநியாயத் தொகையாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கு எப்படி அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சில தியேட்டர்களில் 2000, 3000 ரூபாய் கட்டணம் வாங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி வசூலிக்கும் தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.