மும்பை: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஹெபடாலஜிஸ்ட் கன்சல்டன்ட் மருத்துவராக இருப்பவர் விஸ்வராஜ் வெமலா.
இவர் தனது தாயை பெங்களூ ருக்கு அழைத்து வருவதற்காக பர்மிங்ஹாமில் இருந்து ஏர்இந்தியா விமானத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்தார்.
இந்நிலையில் விமானத்தில் 43 வயது பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அறிந்த விஸ்வராஜ், நாடித்துடிப்பு இல்லாமல் மூச்சு விடாமல் இருந்த அந்தப் பயணியை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஒருமணி நேர சிகிச்சையில் அந்தப் பயணி இயல்பு நிலைக்கு வந்தார்.
விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் சிலரிடம் இருந்து மருத்துவ கருவிகளைப் பெற்று சிகிச்சை அளித்தார். அப்போது அந்தப் பயணிக்கு 2-வது முறை மாரடைப்பு ஏற்பட்டது.
இந்த முறை அவரை உயிர்ப்பிக்க கூடுதல் நேரம் ஆனது. அந்தப் பயணியை விமான ஊழியர்களுடன் சேர்ந்து சுமார் 5 மணி நேரம் விஸ்வராஜ் உயிருடன் வைத்திருந்தார்.
அவசர நிலை கருதி பாகிஸ்தானில் விமானம் தரையிறங்க விமானி அனுமதி கேட்டார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேறு வழியின்றி மும்பையில் விமானம் தரையிறங்கியது அங்கிருந்து உடனடியாக அந்த பயணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து டாக்டர் விஸ்வராஜ் கூறும்போது, “கண்களில் கண்ணீருடன் நோயாளி எனக்கு நன்றி கூறினார். தனது உயிரைக் காப்பாற்றியதற்காக எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வை அந்தப் பயணி தனது வாழ்நாள் முழு வதும் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்” என்றார்.