வேலூர்: “நாம் கொதிப்படையக் கூடிய விஷயங்களை கூறுவதற்காகவே ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூரில் இன்று (ஜன.7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். தமிழ்நாட்டை எவ்வாறு அழைப்பது என்பது நமக்குதான் தெரியும். தமிழகம் என்பதற்கும், தமிழ்நாடு என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு. இதுபோன்று பல நாடுகள் சேர்ந்ததுதான் நமது இந்திய அரசு. இது நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது.
500-க்கு மேற்பட்ட சமஸ்தானங்கள் சேர்ந்ததுதான் இந்தியா. இந்தியா என்று ஒரு நாடு இல்லை. இந்தியா என்பது தேசம். நாடுகளின் கூட்டமைப்பு தான் தேசம். ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு எல்லாம் இணைந்ததுதான் இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை என்று காந்தி சொன்னது இதுதான். இவை எல்லாம் ஆளுநருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஆளுநர் ஒன்று தெரிவித்துவிட்டதால் நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படையக் கூடிய விஷயங்களை கூறவே இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.