புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கண்டித்து மக்களுடன் சேர்ந்து 3வது நாளாக நேற்று உண்ணாவிரதம் இருந்த பாஜ ஆதரவு எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் மயக்கமடைந்தார். புதுச்சேரி மாநிலம், ஏனாம் தொகுதியில் 2021 தேர்தலில் ரங்கசாமியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக். தற்போது இவர் பாஜக ஆதரவு எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏனாம் தொகுதியை ரங்கசாமி புறக்கணித்து வருகிறார்.
தன்னை பழிவாங்குவதாக நினைத்து ஏனாம் மக்களை பழிவாங்குகிறார் என்று கூறி ஏனாம் மண்டல நிர்வாகி அலுவலகம் அருகே கொல்லப்பள்ளி அசோக் எம்எல்ஏ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் கடந்த 6ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். நேற்று 3வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஒரு பக்கம் எம்எல்ஏ போராட்டம், மறு பக்கம் கலைவிழா என பதற்றமான சூழல் ஏனாமில் நிலவியது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஏனாமில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய கொல்லப்பள்ளி அசோக் எம்எல்ஏ, ‘முதல்வர் ரங்கசாமி வாக்குறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஏனாம் நிகழ்ச்சிக்கு வரலாம். அவரை மக்கள் வரவேற்பார்கள்.
நிறைவேற்ற தவறினால் அவரை காலணியால் தாக்குவார்கள்’ என பேசினார். அவரது இந்த பேச்சு மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. அவரை கண்டித்து புதுச்சேரியில் போராட்டங்களும் வெடித்தன. இந்நிலையில், ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நடந்த 19வது ஏனாம் கலைவிழாவின் நிறைவு விழாவில் முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை கலந்து கொண்டார்.
அதே நேரத்தில் 3 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொல்லப்பள்ளி அசோக் எம்எல்ஏ உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேடையில் மயக்கம் ஏற்பட்டு படுத்துக்கொண்டார். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்தனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென கூறிவிட்டார்.