மணப்பட்டு தீம் பார்க்கிற்கு பூர்வாங்க பணிகள்.. துவக்கம்| Preliminaries for the theme park to be married.. launch

புதுச்சேரி : புதுச்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரத்துடன் கூடிய பிரம்மாண்டமான தீம் பார்க்கினை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

பிரெஞ்சு கலாசாரத்தின் ஜன்னலாக புதுச்சேரி விளங்குவதாலும், இங்குள்ள பாரம்பரிய கட்டடங்கள், சுற்றுலா இடங்களை காணவும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக வெளிநாட்டவர் புதுச்சேரிக்கு வருகின்றனர்.

மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உட்கட்டமைப்பினை மேம்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக கடற்கரை கிராமங்களை தேர்வு செய்து, சிறந்த கடற்கரைகளாக அழகுப்படுத்தி கவர்ந்தது. அடுத்தக்கட்டமாக, சுற்றுலாத் திட்டங்கள் மூலம் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் பெருக்குவதற்கான திட்டங்களை முன்னெடுக்க துவங்கியுள்ளது.

இதற்காக, புதுச்சேரி அடுத்த மணப்பட்டு கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகருடன் கூடிய பிரமாண்டமான தீம் பார்க்கினை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதற்கான திட்டம், ஆலோசனைகளை வகுக்க கன்சல்டன்சி நிறுவனம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கான, டெண்டர் பணியை தற்போது அரசு ஆரம்பித்துள்ளது.

இந்த டெண்டரில் மூன்று நிறுவனங்கள் தற்போது பங்கேற்றுள்ளன. இதில் இருந்து ஒரு நிறுவனத்தை இறுதி செய்து, விரைவில் பணிகள் ஒப்படைக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் பல இடங்களை கண்டறிந்து சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தினாலும், அதில் பெரிய அளவில் வருவாய் இல்லை. இதனால் தான் மணப்பட்டு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில், ரெஸ்ட்ரண்ட், குடில்கள், திரைப்பட நகரம், விளையாட்டுகள் என, அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய வகையில் பிரம்மாண்டமான தீம் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது.

சுற்றுலா திட்டங்களில் சீசன் வருமானம் போன்று இல்லாமல், நிரந்தரமாக வருமானம் ஈட்ட வேண்டும் என்பது அரசின் முடிவாக உள்ளது.

ஒன்று கைவிட்டாலும், அடுத்த கட்டமைப்பின் மூலம், ஆண்டு முழுவதும் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்பதால் மணப்பட்டு கிராமத்தில் தீம்பார்க் அமைப்பதற்கான பணிகளை சுற்றுலாத் துறை வாயிலாக அரசு விரைவுப்படுத்தி வருகின்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.