போல்பூர்: மேற்குவங்க மாநிலம் ஹவுரா-புதிய ஜல்பைகுரி பகுதியை இணைக்கும் வகையில் இயங்கி வருகிறது வந்தே பாரத் விரைவு ரயில். அண்மையில் தொடங்கப்பட்டது இந்த ரயிலின் சேவை. இந்நிலையில், இந்த ரயிலை குறிவைத்து மூன்றாவது முறையாக கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த கல்வீச்சில் சி14 பெட்டி சேதமடைந்துள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போல்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் வந்தே பாரத் ரயில் நின்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் மட்டுமே வந்தே பாரத் ரயில் நின்று செல்வது வழக்கம்.
இந்த சம்பவம் மால்டா பகுதியில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 30-ம் தேதி இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். ஹவுரா-ஜல்பைகுரி இடையிலான 550 கி.மீ தூரத்தை இணைக்கும் இந்த ரயில் சுமார் ஏழரை மணி நேரத்தில் தனது பயண இலக்கை அடைகிறது. புதன்கிழமையை தவிர வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படுகிறது.