லிட்டருக்கு ரூ.10 லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா? – ராமதாஸ் கேள்வி

சென்னை: லிட்டருக்கு ரூ.10 லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா? என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனாலும், சில்லறை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது. 2022 ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பிறகு கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6 லாபம் கிடைக்க நிலையில், பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலைகளையும் லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால், திடீரென அம்முடிவு கைவிடப்பட்டதன் காரணம் புரியவில்லை.

மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்“ என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.