புதியதும் தனித்துவமானதுமான ஓர் முயற்சியாக 2023 ஜனவரி 12-13 ஆகிய திகதிகளில் இந்தியா விசேட மெய்நிகர் மாநாடொன்றை நடத்தவுள்ளது.
உலகின் தென்பகுதி நாடுகளின் ‘”ஒருமித்த குரல், ஒருமித்த நோக்கம்” என்ற தொனிப்பொருளுடனான இந்த ‘Voice of Global South’’ மாநாடு, உலகளாவிய தென்பகுதி நாடுகள் தமது முன்னுரிமைகள் மற்றும் நோக்குநிலையினை பொதுவான ஒரு தளத்தில் பகிர்வதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலகளாவிய ரீதியில் 120 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2. பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் சப்க சாத், சப்க விகாஸ், சப்க விஸ்வாஷ் மற்றும் சப்க பிரயாஸ் என்ற தொலைநோக்கினால் ஈர்க்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு வசுதைவ குடும்பகம் என்ற இந்திய தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
3. பங்காளி நாடுகளால் இம்மாநாட்டில் முன்வைக்கப்படும் பெறுமதியான உள்ளீடுகள் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்படுவதனை உறுதிசெய்ய இந்தியா தொடர்ந்து செயலாற்றும்.
4. அத்துடன், ஜி20 மாநாடுகள் மூலமான எதிர்பார்ப்புகள் மற்றும் தமது சிந்தனைகளை ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகள் ஆணித்தரமாக முன்வைப்பதற்கான விசேட வாய்ப்பினை ஜி20 இந்திய தலைமைத்துவம் வழங்குகின்றது. ஜி20 பங்காளி நாடுகள் மட்டுமல்லாது உலகின் தென்பகுதியிலுள்ள ஏனைய நாடுகளின் ஆலோசனைகளுடனுமே ஜி20 இந்திய தலைமைத்துவம் வடிவமைக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியதற்கமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
5. இந்த மாநாடு 10 அமர்வுகளாக நடைபெறுகின்றது. ஜனவரி 12 ஆம் திகதி நான்கு அமர்வுகளும் ஜனவரி 13 ஆம் திகதி ஆறு அமர்வுகளும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அமர்வுகளிலும் 10 முதல் 20 வரையான நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
6. அரச தலைவர்கள் மட்டத்தில் நடைபெறும் ஆரம்ப மற்றும் நிறைவு நிகழ்வுகளை பிரதமர் தலைமை தாங்கி நடத்தவுள்ளார். தலைவர்கள் மட்டத்திலான ஆரம்ப அமர்வுகள் Voice of Global South – for Human-Centric Development” என்ற தொனிபொருளிலும் தலைவர்கள் மட்டத்திலான நிறைவு அமர்வுகள் “Unity of Voice-Unity of Purpose” என்ற தொனிப்பொருளுடனும் நடைபெறவுள்ளது.
7. அதற்கு மேலதிகமாக அமைச்சர்கள் மட்டத்திலான 8 அமர்வுகள் பின்வரும் தொனிப்பொருட்களுடன் நடைபெறவுள்ளன.
- ‘மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்திக்கு நிதியளித்தல்’ குறித்து நிதி அமைச்சர்களின் அமர்வு
- ‘சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளுடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்தல்” குறித்து சூழல்துறை அமைச்சர்கள் மட்டத்திலான அமர்வு
- “உலகின் தென்பகுதி நாடுகளின் முன்னுரிமைகள் – ஒத்திசைவான சூழலை உறுதிப்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட அமர்வு
- “சக்திப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி – செழுமைக்கான வழிகாட்டல்” குறித்து சக்தித்துறை சார்ந்த அமைச்சர்கள் மட்ட அமர்வு
- “நெகிழ்ச்சித்தன்மையுடைய சுகாதாரப்பராமரிப்பு முறைமையை கட்டிஎழுப்புதல்” குறித்து சுகாதாரத் துறை அமைச்சர்களின் அமர்வு
- “மனித வள அபிவிருத்தி மற்றும் ஆளுமையை கட்டிஎழுப்புதல்” குறித்து கல்வி அமைச்சர்களின் அமர்வு
- “உலகளாவிய தென்பகுதி நாடுகளிடையில் ஒருங்கிணைப்புகளை உருவாக்குதல் – வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை மற்றும் வளங்கள்” குறித்து வர்த்தக மற்றும் வியாபரத்துறைசார் அமைச்சர்களின் அமர்வு
- “ஜி20; இந்திய தலைமைத்துவத்துக்கான பரிந்துரைகள்” குறித்து வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட அமர்வு
8. இம்மாநாடு குறித்த மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்
(2023 ஜனவரி 6 ஆம் திகதி வெளியுறவுத் துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலிருந்து உள்ளிடுகள் பெறப்பட்டன)
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு