"ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை பதவிக்குச் செல்லலாம்!" – கி.வீரமணி தாக்கு

சேலம், அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் திராவிடர் இயக்கத்தின் தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் படிக்க வேண்டிய உரையை படிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல். அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். அந்த வகையில் தனது கடமையிலிருந்து தவறிய அரசு ஊழியர் குற்றத்துக்கு ஆளாகிஇருகிறார்.

தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடிய கீழ்தரமான செயலில் எந்த ஒரு ஆளுநரும் ஈடுபடவில்லை. ஆளுநர் உரை என்பது அவரால் எழுதப்படுவது அல்ல, அமைச்சரவைக் கொள்கைகளை முடிவுசெய்து இவர் மூலம் அறிவிப்பதுதான் சட்டமாகும். எனவே அவர் அந்த உரையை அப்படியே படித்திருக்க வேண்டும்.

கி.வீரமணி

மேலும் மத்திய அரசின் உரையை நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் எப்படி வாசிக்கிறாரோ… அதைப்போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு ஆளுநர் படிப்பதற்காக அனுப்பப்படும். அவருக்கு ஆட்சேபனை இருந்தால் தமிழ்நாடு அரசுக்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் முடிவு செய்யப்படும். ஆனால், உரையில் ஒரு பகுதியை விட்டுவிட்டு படிப்பது என்பது தவறான முன்னுரை, முன்மாதிரி, அரசை அவமதிப்புக்கும் செயல்.

சொந்த கருத்துகளை படிப்பதற்கோ, நீக்குவதற்கோ அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு உரிமை கிடையாது. இதுவே நீண்டகாலமாக காப்பாற்றக்கூடிய மரபாகும். குறைந்தபட்ச மரபைக்கூட அவர் மதிக்கவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது அவமதிப்பு செயல், இதுபோன்று சட்டமன்றத்தில் மோசமான நடந்துகொண்ட ஆளுநர் இதுவரை கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்திற்கான உறுதிமொழிக்கு முற்றிலும் விரோதமான செயலாகும்.

கி.வீரமணி

அவர் தமிழக ஆளுநராக நடந்து கொள்ளவில்லை. முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்-காரராகவே நடந்து கொண்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் இவருக்கு, வேறு விதமான எண்ணம் இருந்தால் இந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலை இருக்கும் பதவிக்கு வேண்டுமென்றால் செல்லலாம்.

தனிப்பட்ட முறையில் ஆளுநர் ரவி கூறுவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒருவர் சட்டமன்ற மரபுகளை எல்லாம் குழிதோண்டி புதைப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் எடுத்த உறுதிமொழிக்கு விரோதமாக உள்ளது.

மேலும், ஆளுநர் 20 மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். அவற்றை ஒன்று திருப்பி அனுப்ப வேண்டும், அல்லது அதற்கான காரணம் கேட்க வேண்டும். ஆனால் எதுவுமே செய்யவில்லை. இவர் தீட்டும் திட்டமெல்லாம் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்-ஸுடைய திட்டமாக உள்ளது.

எங்கெல்லாம் பா.ஜ.க ஆளவில்லையோ… அங்கெல்லாம் ஆளுநரைப் போட்டு, ஆட்சி செய்து வருகின்றனர் பி.ஜே.பி-யினர். அந்த வகையில் தமிழகத்திலுள்ள ஆளுநரும் அப்படியாகவே நடந்து கொண்டு வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் செய்த காரியத்துக்கு, நேர்மையான மத்திய அரசாக இருந்தால், உடனே அவரை திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவருடைய திட்டமே ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அரசு நீடிக்கக் கூடாது, மோதல் போக்கை உருவாக்க வேண்டும் என்பதுதான்” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.