சென்னை: “அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் உச்சரிக்கவில்லை என்பது வேதனையான விஷயம். இதேபோல், திராவிட மாடல் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி பல பிரச்சினைகளை ஆளுநர் உருவாக்கி வருவது எனக்கு உண்மையிலேயே வேதனையளிக்கிறது” என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நடந்துமுடிந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாளை சட்டமன்றம் கூடியவுடன் சட்டமன்றத்தில் பணியாற்றி வந்த திருமகன் மற்றும் இறந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் சட்டமன்றம் முழுமையாக ஒத்திவைக்கப்படும்.
வரும் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு தினங்களும் சட்டமன்றம் முழுமையாக நடைபெறும். 13-ம் தேதி தமிழக முதல்வர் பதில் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடையும்” என்றார்.
இன்று ஆளுநர் உரையின்போது அவையில் என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கான ஆளுநர் உரை ஆங்கிலத்தில் கடந்த 5-ம் தேதி அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு, 7-ம் தேதி ஆளுநர் அனுப்பிவைத்திருந்தார்.
இன்று பேரவையில் அந்த உரையை வாசிக்கும்போது, பல பகுதிகளை விட்டும், புதிதாக பல பகுதிகளைச் சேர்த்து வாசித்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆளுநர் உரை எழுதி ஒப்புதல் பெறப்பட்டது. அதைதவிர பத்திரிகைகள் வேறு எதையும் பிரசுரிக்க வேண்டாம் என்று முதல்வர் கண்ணியத்தோடு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது” என்றார்.
அப்போது ஆளுநர் உரையில், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சபாநாயகர், “நாங்கள் எதையும் நீக்கவில்லை. எதையும் சேர்க்கவில்லை” என்று கூறினார்.
அவை நடவடிக்கை முடிவதற்குமுன் ஆளுநர் சபையில் இருந்து வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சபைக்கு ஆளுநர் உரையாற்ற வந்தார். ஆளுநர் உரை முடியும் வரை இருந்து, தேசியகீதம் நிறைவாக பாடப்படும் வரை இருந்து, தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்துவதுதான் இதுவரை இருக்கும் மரபு.
ஆளுநருக்கு எதில் உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச்சட்டம் 175, 176-ல் தான் மாநில சட்டமன்றங்களில் ஆளுநர் உரையாற்ற அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு ஆளுநருக்கு வழங்கப்படுகிற அந்த உரிமையின் அடிப்படையில்தான், அதாவது நம்முடைய இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான், நம் ஜனநாயகத்தைப் பாதுகாத்து, நம்மையும் தாங்குகிறது. உலக அளவில் இந்தியாவை ஜனநாயக நாடு என்பது கூறுவதற்கே இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் காரணம்.
அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் உச்சரிக்கவில்லை என்பது வேதனையான விஷயம். இதேபோல், திராவிட மாடல் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி பல பிரச்சினைகளை ஆளுநர் உருவாக்கி வருவது எனக்கு உண்மையிலேயே வேதனையளிக்கிறது.
மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமை ஆளுநர்தான். அவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார். விமர்சிப்பதற்காக கூறவில்லை, இதை தவிர்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.