’ஆளுநரே வெளியேறு’ ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை வாசித்தார். அப்போது அதில் சில வார்த்தைகளை விட்டும், சில வார்த்தைகளை சேர்த்தும் வாசித்து முடித்தார். அதுவும் அரசு கொடுத்த உரையை முழுமையாக வாசிக்கவும் இல்லை. இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல் ஆட்சிக்கு முரணாக செயல்படுவதாக சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். திராவிட கொள்கைகளுக்கு மட்டுமல்லாமல் அரசின் கொள்கைகளுக்கும் எதிராக அவர் செயல்பட்டிருப்பது சட்டப்பேரவையின் மரபை மீறிய செயல் எனக் கூறினார்.

மேலும், ஆளுநரின் உரைக்கு பதிலாக அரசு அச்சடித்து கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உரையை வாசித்து முடித்தவுடன், தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே அவையில் இருந்து கோபமாக வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் கண்டனத்தை பதிவு செய்தார். 

சட்டப்பேரவை மாண்புக்கு எதிராக ஆர்.என்.ரவி செயல்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #GetoutRavi என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டத்தையும் அறிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தமிழக அரசையும், முதலமைச்சர் அவர்களின் தகுதியை அவமதிக்கும் வகையிலும், அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவியை கண்டித்து வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.