இன்று கூடுகிறது இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் ..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது.

சட்டசபைக்கு வரும் கவர்னர் ஆர்.என். ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். பின்னர் கவர்னருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். அதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்வார். அதன் பின்னர் அவரை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். அவர் வரும் வழியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும். கவர்னர் உள்ளே வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமருவார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் உட்காருவார்.

இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார். சுமார் ஒரு மணிநேரம் கவர்னர் உரை நிகழும். அதைத் தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். காகிதம் இல்லாத சட்டசபை என்பதால், அவர்களின் உரைகள், சட்டசபையில் உள்ள தொடுதிரை கம்ப்யூட்டர்களில் திரையிடப்படும். கவர்னர் மற்றும் சபாநாயகரின் உரை முழுவதும் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

இன்று 10-ம் தேதி சட்டசபை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்த திருமகன் ஈவெராவின் மரணம் குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் 11-ம் தேதி சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள்.

இந்த கூட்டத்தொடரின்போது ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்ப உள்ளன. சட்டம் ஒழுங்கு, கோவை கார் வெடிப்பு, பரந்தூர் விமான நிலையம், விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த கூட்டத் தொடரில் எழுப்பப்படும் என தெரிகிறது. எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.