மலேசிய பேட்மிண்டன்
மொத்தம் ரூ.10¼ கோடி பரிசுத் தொகைக்கான மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 15-ந் தேதி வரை கோலாலம்பூரில் நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), லீ ஜீ ஜியா (மலேசியா), அகானா யமாகுச்சி (ஜப்பான்), தாய் ஜூ யிங் (சீன தைபே), ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து (இந்தியா) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார். கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த சிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு பிறகு களம் திரும்பும் முதல் போட்டி இதுவாகும். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினுக்கு எதிராக இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடி அதில் 5-ல் மட்டுமே சிந்து வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், சீனாவின் ஹான் யூவையும், அகார்ஷி காஷ்யப், சீன தைபேயின் ஹூ வென் சியையும், மாளவிகா பான்சோத், தென்கொரியாவின் அன் சி யங்கையும் தங்களது முதல் சுற்றில் சந்திக்கின்றனர்.
லக்ஷயா- பிரனாய்
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் சக நாட்டு வீரர் எச்.எஸ். பிரனாயுடன் மோதுகிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, கிருஷ்ண பிரசாத்-விஷ்ணுவர்தன் ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் திரீஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பட்-ஷிகா கவுதம் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆண்டின் முதல் பேட்மிண்டன் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் தீவிரம் காட்டுவார்கள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.