சென்னை: உரைக்கு ஒப்புதல் அளித்து விட்டு பின்னர் அவையில் அதனை ஆளுநர் மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார். உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
இதன்பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் குற்றச்சாட்டினார். அவர் பேசுகையில்,”தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார்.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்துச் செல்லும் உரை. சமூக நீதி மற்றும் சமத்துவம் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துள்ளார். அம்பேத்கரின் பெயரை கூட ஆளுநர் சொல்ல மறுத்துள்ளார். தேசிய கீதத்துக்கும் உரிய மாரியாதையை ஆளுநர் அளிக்கவில்லை. தேசிய கீதத்துக்கு முன்பு அதிமுகவினர் வெளியேறியது அநாகரிகமானது.
அரசின் உரை ஆளுநருக்கு 5ம் தேதி முறையாக அனுப்பி வைக்கப்பட்டது. உரைக்கு ஒப்புதல் அளித்து விட்டு மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல. அரசுடன் ஆளுநருக்கு கருத்து மோதல் இருந்தாலும் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக உரையை முரணாக வாசித்துள்ளார் ஆளுநர்” என்று கூறினார்.