திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கும் ஒருநாள் நன்கொடை திட்டத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி அன்ன பிரசாத அறக்கட்டளையை ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ₹33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம்.
இந்த ெதாகையில் காலை உணவுக்கு ₹7.70 லட்சமும், மதிய உணவுக்கு ₹12.65 லட்சமும், இரவு உணவிற்கு ₹12.65 லட்சமும் பயன்படுத்தப்படும். நன்கொடை வழங்குபவர்கள் தாங்களாகவே பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கலாம். தானம் செய்யும் நன்கொடையாளரின் பெயர் வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் டிஜிட்டல் திரையில் வைக்கப்படும். பிரமோற்சவத்தில் கருட சேவை, ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி ஆகிய முக்கிய உற்சவ நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்ன பிரசாதம் வழங்குகிறது. திருமலையில் உள்ள மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சட்னியுடன் உப்புமா, பொங்கல் மற்றும் சேமியா உப்புமா வழங்கப்படுகிறது.
காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சட்னி, சாதம், சாம்பார், ரசம், மோர் வழங்கப்படுகிறது. திருமலையில் ஒரு நாளைக்கு 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகள் கொண்டு அன்ன பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு செய்து வரும் அன்னதான திட்டத்தில் பக்தர்களும் தங்களின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாள் அன்ன பிரசாதம் வழங்க நன்கொடை செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.