புனே: கோவாவாக்ஸ்(Covovax) தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்-க்குப் பயன்படுத்துவதற்கு இன்னும் 10-15 நாட்களில் அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவின் புனே நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அதார் பூனாவாலா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாவாக்ஸ் ஆகியவற்றின் இருப்பு மத்திய அரசிடம் போதுமான அளவு உள்ளது. இவற்றை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் பயன்படுத்த அனுமதி கோரி உள்ளோம். இதற்கான அனுமதி இன்னும் 10-15 நாட்களில் கிடைத்துவிடும்.
கரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கக்கூடிய ஆற்றல் கோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு இருக்கிறது. எனவே, இதனை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக்கொள்வது பாதுகாப்பை அளிக்கும். கரோனா வைரஸ் பரவியபோது நாடு மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டது. ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டியது இருந்தது. அதோடு, நாம் 70-80 நாடுகளுக்கும் நமது தடுப்பூசியை வழங்கி உள்ளோம். இதனால், நமது நாடும் உலகமும் பாதுகாப்பு கவசத்தை பெற கரோனா தடுப்பூசிகள் பெரும் பங்காற்றி இருக்கின்றன.
இதற்கு மத்திய அரசின் தலைமைதான் முக்கியக் காரணம். அதோடு, அனைத்து மாநில அரசுகள், சுகாதாரப் பணியாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்பட பலரது பங்களிப்பு இதில் இருக்கிறது. பொதுவான இலக்கை அடைய அனைவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். என அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.