சட்டமன்றத்தில் இரட்டை தவறு செய்த ஆளுநர் ரவி… முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் தண்டனை என்ன?

2023 புத்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் இப்படி அமையும் என்று பாவம் தமிழ்நாட்டு மக்கள் சத்தியமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சபையில் இன்று அரங்கேறிய களேபரங்களுக்கு முழுமுதற்காரணம் ஆளுநர் ஆர்.என்,ரவி தான் என்று சொன்னால், மனசாட்சி உள்ள யாரும் அரசியல் அப்பாற்பட்டு ஒப்புகொள்ளதான் செய்வார்கள்.

ஆண்டின் முதலாவது சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற மரபுபடியே இன்று காலையும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. மாநில அரசால் தயாரிக்கப்பட்டு, அதன் வரைவு (Draft) ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் அச்சிடப்பட்ட உரையை வாசிக்க தொடங்கிய கவர்னர் ரவி, தான் இதுவரை பொதுவெளியில் பேசிவரும் கொள்கைக்கு முரணாக, ஆளுநர் உரையில் இடம்பிடித்திருந்த வார்த்தைகளை மிகவும் கவனமுடன் தவிர்த்து பேசினார்.

TAMILNADU GOVERNMENT என்பதற்கு பதிலாக THIS GOVERNMENT என்று பேச தொடங்கியவர், தமிழ்நாடு அமைதி பூங்கா என்பதை வாசிக்கவும் தவிர்த்தார் என்பதுதான் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் சபையில் முன்வைத்த குற்றச்சாட்டு. அத்துடன் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அண்ணா என ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தலைவர்களின் பெயரையும், திராவிட மாடல் அரசு என்பதையும் தமது உரையில் மிகவும் கவனமாக தவிர்த்தார் ரவி.

மத நல்லிணக்கம், பெண்ணுரிமை, சமூக நீதி போன்ற திமுக அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஆளுநர் தமது உரையில் திட்டமிட்டு தவிர்த்ததாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் பொங்கி எழவே, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த முதல்வர் ஸ்டாலின், தமது இருக்கையைவி்ட்டு எழுந்து பேச ஆரம்பி்த்தார்.

தமது உரையின் உச்சமாக, ‘ஆளுநர் உரையென்று ஏற்கெனவே அச்சிடப்பட்ட வார்த்தைகளை தவிர்த்து, அவர் சபையில் தன்னிச்சையாக பேசிய வார்த்தைகள் எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாது’ என்று தீர்மானத்தை முதல்வர் சபையில் முன்மொழியவே, அது ஏகமனதாக நிறைவேறியும்விட்டது.

ஆளுநர் பேசிக் கொண்டிருக்கும்போது முதல்வர் குறுக்கிட்டு பேசியது சபை மரபை மீறி செயல் ஆகாதா? என்ற வாதமும், சபை மரபை மீறி ஆளுநர் உரையாற்றியதால் தான், முதல்வரும் மரபை மீற வேண்டியதானது என்ற எதிர்வாதமும் அரசியல் அரங்கில் தற்போது ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது.

ஆனால், சபை மரபை மீறி ஆளுநர் இன்று ஆற்றியதாக கூறப்படும் உரையின் மூலம், ஆளுநர் உரைக்கான வரைவை (DRAFT) மாநில அரசு கவர்னர் மாளிகைக்கு இனி முன்கூட்டி அனுப்பதான் வேண்டுமா? என்ற தவறான முன்னுதார கேள்வியை தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி, அரசியல் அரங்கில் தட்டி எழுப்பி உள்ளார்.

அவை நடவடிக்கைகள் நிறைவுற்றதாக முறைப்படி சபாநாயகர் அறிவித்ததற்கு பின், தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகுதான் சபையில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற மரபையும் மீறி, முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோதே, சபையில் இருந்து கோபமாக வெளியேறி உள்ளார் ஆளுநர் ரவி. இதன் மூலம், ஒரு மாநிலத்தி்ன் பெரிய பதவியான ஆளுநர் பொறுப்பை வகித்தால், அவர் தேசிய கீதத்துக்குகூட மரியாதை தர வேண்டிய அவசியமில்லையா? என்ற கேள்வியையும் பல்வேறு தரப்பினர் மனதில் எழுப்பி உள்ளார் ஆளுநர் ரவி.

டென்னிஸ் விளையாட்டில் Double fault என்பதை போல், சட்டமன்றத்தில் இன்று இரட்டை தவறுகளை செய்திருக்கிறார் ஆர்.என்.ரவி. அவரது இந்த தவறுக்கு சபையில் கண்டன தீ்ர்மானம் நிறைவேற்றி உள்ளதை தாண்டி, தமிழநாட்டின் முதல்வர் ஸ்டாலினும், சபாநாயகர் அப்பாவும் என்ன தண்டனையை முன்மொழிய போகிறார்கள்? என்பதுதான் தமிழக அரசியலில் தற்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.

“சபையில் ஆளுநர் பேசும்போது முதல்வர் உட்பட யாரும் குறுக்கிட கூடாது என்ற மரபை மீறி ஸ்டாலின் பேசியதும் இல்லாமல், தமக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்படுவதை எந்த ஆளுநர் தான் பொறுமை காத்து பார்த்து கொண்டிருப்பார். அதனால்தான் ஆர்.என்.ரவி சபையில் இருந்து தேசிய கீதம் இசைக்கப்படாத முன்பே வெளியேறினார். இதில் தவறு ஆளுநருடையது அல்ல; முதல்வர் ஸ்டாலின் உடையதுதான்” என்கின்றனர் பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.