சென்னை, விருகம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் முருகன் (35). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ராஜாத்தி (30), இவர் கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து ராஜாத்தி அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பிரோ திறந்திருந்தது. மேலும், பீரோவுக்குப் பின்னால் யாரோ ஒருவர் மறைந்திருப்பதையும் ராஜாத்தி கவனித்தார். உடனடியாக அவர், `திருடன்… திருடன்’ என சத்தம் போட்டார்.
அதனால் அந்த மர்ம நபர், ராஜாத்தியின் கழுத்தில் கூர்மையான இரும்புக் கம்பியை வைத்து மிரட்டியபடி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பீரோவில் வைத்திருந்த தங்கநகைகள், ரூ.10,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து முருகன், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் டிப்டாப்பாக வரும் இளைஞர் ஒருவர் போனில் பேசியபடியே சர்வசாதரணமாக நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அந்த இளைஞர், முகத்தை மறைத்தப்படி செல்வதும் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்றும், சினிமாவில் மேக்கப் மேனாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அதையடுத்து, ஆனந்தனைப் பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.