தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆளுநர் உரையில் சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் முழுமையாக ஆளுநர் ரவி கடந்து சென்றார். தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ரவி வாசிக்காமல் சில பாகங்களை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் வாசித்தார். அப்பொழுது சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஜனவரி 13-ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.