ஜி-20 முதல் கூட்டம் கொல்கத்தாவில் தொடங்கியது: ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற தலைப்பில் வரவேற்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஜி-20 நாடுகளின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.  ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற பெயரில் நகரப்பகுதியில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் முதல் கூட்டம் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொல்கத்தாவிற்கு வந்துள்ளனர்.

கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள விஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உலகளாவிய கூட்டாண்மை (ஜி.பி.எஃப்.ஐ) குறித்து ஜி-20 பிரதிநிதிகள் விவாதிக்கின்றன். மூன்று நாட்கள் நடைபெறும் பல்வேறு அமர்வுகள் மற்றும் கூட்டங்களில் மேற்கண்ட தலைப்புகளில் பிரதிநிதிகள் பேசவுள்ளனர். முன்னதாக ஜி-20-யின் முதல் கூட்டம் கொல்கத்தாவில் நடப்பதால் ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற தலைப்பில் நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜி -20 பிளக்ஸ் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவை கொல்கத்தா விமான நிலையம் முதல் அருங்காட்சியகம், ஹவுரா பாலம், தாகூர்பரி வரை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கொல்கத்தாவில் தொடங்கிய முதல் கூட்டத்தில், ஜி-20 உடன் தொடர்புடைய நாடுகளின் பிரதிநிதிகளைத் தவிர, சர்வதேச நாணய நிதியம், நிதி அமைச்சகம், நபார்டு மற்றும் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.