வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கும் இல்லாத சிறப்பாக காய்கறி , பழ கழிவுகளில் எரிவாயு தயாரிக்கும் நிலையம் அமைத்து வத்தலக்குண்டு பேரூராட்சி அசத்தி வருகிறது.
வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி நகராட்சியாகும் நகர்கள் பட்டியலில் உள்ளது. இந்த நகராட்சியில் 23 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். வத்தலக்குண்டுவில் நெல், வாழை உள்பட பல்வேறு விவசாயங்களே பிரதான தொழிலாக உள்ளது. வத்தலக்குண்டு உசிலம்பட்டி பிரிவில் உள்ள குப்பை கிடங்கில் துணி கழிவுகளால் பெண்களை வைத்து கால் மிதியடி தயாரித்தும்.
காய்கறி கழிவுகளை வைத்து மாட்டுபண்ணை அமைத்தும், மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்றும் அசத்தி வருகிறது. அந்த வகையில் வத்தலக்குண்டு தெற்குத் தெருவில் காய்கறி மற்றும் பழ கழிவுகளில் எரிவாயு தயாரிக்க ரூ.20 லட்சம் மதிப்பில் எரிவாயு நிலையம் அமைந்துள்ளது. 100 கிலோ காய்கறிகழிவுகளில் இருந்து 5 கிலோ எரிவாயு எடுக்கப்படும். எரிவாயு நிலையம் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டுவில் மட்டுமே உள்ளது.
வத்தலககுண்டு அருகே ஆடுசாபட்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு எரிவாயு நிலையத்தில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்தேக்க தொட்டியில் சேமிக்கப்படுகிறது. பின்னர் எரிவாயு மூலம் 15 கிலோ வாட் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு தரைமட்ட நீர் தொட்டியில் இருந்து தண்ணீர் மேல்நிலை தொட்டியிலேற்றப்படுகிறது.
அதன் பிறகு ஊருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மின்சாரத்தை சிக்கனபடுத்த முடிகிறது. மேலும் மாதம் ஒரு முறை மின்தடை ஏற்பட்டாலும் எந்த வித தடங்கலுமின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடிகிறது. மேலும் வீடுகளில் தூக்கி வீசப்படும் காய்கறி கழிவுகள் நம் வீட்டுக்கு தண்ணீர் கொண்டு வர உதவுகிறது. காய்கள் மற்றும் பழங்கள் கழிவுகளில் கிடைக்கும் விதைகளில் அங்கு தனியே நாற்றுப்பண்ணை அமைத்துள்ளனர்.
அங்கு பேரூராட்சி மேற்பார்வையாளர் கண்ணன் தலைமையில் 2 பெண்கள் பணி புரிகின்றனர். அவர்கள் காய்கறி மற்றும் பழ கழிவுகளில் இருந்து விதைகளைப் பிரித்து நாற்றுப்பண்ணைக்கு பயன்படுத்துகின்றனர். மற்றவற்றை எரிவாயு தயாரிக்க உபயோகப்படுத்துகின்றனர். இங்கு மல்லிகை பதியம், ரோஜா, நாட்டு செம்பருத்தி, குரோட்டன்ஸ் எலுமிச்சை ,நாவல், புளி, சரக்கொன்றை போன்ற மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. வீடுகளில் வளர்க்க மரக்கன்று வாங்க வருவோரை எலுமிச்சை பழம் கொடுத்து வரவேற்று மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகின்றனர். மேலும் அரசு விழாக்களில் பேரூராட்சி சார்பாக மரக்கன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
வத்தலகுண்டுவுக்கு முன்னிருந்த பெயர் வெற்றிலைக்குன்று. அது நாளடைவில் மருவிவத்தலக்குண்டு ஆனது. வெற்றிலை குன்று என்ற பெயர் மறைந்தது போலநாளடைவில் வெற்றிலை விவசாயமும் இங்கு வெகுவாக குறைந்துவிட்டது. ஊரின் அடையாளமாக இருந்த வெற்றிலையைபாதுகாக்கும் நோக்கத்தில் வீடுகளுக்கு இங்கிருந்து வெற்றிலை கொடி வழங்கப்படுகிறது.மேலும் வத்தலகுண்டுவில் விளைந்த நாட்டு வெற்றிலை,காரம் நிறைந்த கிராம்பு,சிறுமணிவெற்றிலை வகைகள் தமிழக அளவில் பெயர் பெற்றதாகும்.
மேலும் உடலுக்குமிகுந்த எதிர்ப்பு சக்தியை அளிப்பதாகும்.எனவே , வெற்றிலை ரகங்களை நாற்றுப்பண்ணையில்உற்பத்தி செய்து வீடுகளுக்கு வழங்குகின்றனர். இதனால் ஊர் மக்கள் தங்கள் ஊரின் அடையாளத்தை காப்பதோடு வெற்றிலையால் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு நலமாக வாழ்கின்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்
இது குறித்து சமூக ஆர்வலர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘‘வத்தலகுண்டு பேரூராட்சியின் இச்செயல்பாட்டால்ஊர் பசுமையாகவும் ஊரில் உள்ளோர் நலமாகவும் உள்ளனர். மரக்கன்று வளர்ப்பதில் பேரூராட்சிக்கு இருக்கும் அளவு ஆர்வம் பொதுமக்களிடம் இல்லை. எனவே பேரூராட்சியினர் சிறப்பு முகாம் அமைத்து மரக்கன்று வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு பேரூராட்சியினர் மக்கள் மரக்கன்று வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். இதனால் வீடு அழகாக உள்ளது. குளிர்ச்சியாகவும் உள்ளது. வீட்டுக்கு தேவையான காய்கறியும் கிடைக்கிறது. எனவே இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம் நடந்த பட வேண்டும்’’என்றார்.