திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சாக்லேட் பவுடருடன் கலந்து பவுடர் வடிவில் கடத்தப்பட்ட 211 கிராம் தங்கம் மற்றும் 176 கிராம் ெசயின்கள், ரூ.74லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் நேற்று வந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி, கைப்பையில் மர்ம பொருளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கைப்பையை சோதனை செய்ததில் 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 10 ஆயிரம் யூரோ பணம் இருப்பது தெரியவந்தது. இது இந்திய ரூபாயில் மதிப்பு ரூ.74 லட்சத்து 19 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் நேற்று துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஒரு ஆண் பயணி கொண்டு வந்த 3 சாக்லேட் பவுடர் டப்பாக்களில் சாக்லேட் பவுடருடன் கலந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பவுடரை கண்டுபிடித்தனர். தங்கத்தை தனியே பிரித்தெடுத்ததில் 211 கிராம் 24 காரட் தூய்மையான தங்கம் மீட்கப்பட்டது. மேலும் அந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில் 175 கிராம் எடையுள்ள தங்க செயின்கள் கண்டெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.21.55 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.