துணிவு படத்துக்குதான் அதிக திரையரங்குகள் ஒதுக்கீடா?.. என்ன காரணம்? இதுவரை நடந்தது என்ன?

விஜய்யின் ‘வாரிசு’ படத்தைக் காட்டிலும், அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன. இதுகுறித்து இங்குப் பார்ககலாம்

அஜித்தின் ‘துணிவு’:

ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் இணைந்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, பிரேம், ஜி.எம். சுந்தர் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நாளை மறுதினம் இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணிக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் ‘வாரிசு’:

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் முதல் முறையாக விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீமன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கு மொழியைத் தவிர உலகம் முழுவதும் இந்தப் படமும் நாளை மறுதினம் வெளியாகிறது. தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது.

image

வீரம் VS ஜில்லா:

கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி பொங்கலை முன்னிட்டு அஜித்தின் ‘வீரம்’ மற்றும் விஜய்யின் ‘ஜில்லா’ படங்கள் நேரடியாக மோதியது. இந்த இரு நடிகர்களுமே முன்பை விட தற்போது மிகப் பெரிய நடிகர்களாக வளர்ந்துள்ள நிலையில், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வருடம் நேரடியாக மோத உள்ளதால் ரசிகர்களிடையே ஒரு பரபரப்பு உள்ளது.

இது ‘துணிவு’ பொங்கலா, இல்லை ‘வாரிசு’ பொங்கலா என்று சமூகவலைத்தளம் முதல் திரையரங்குகளில் கட் அவுட் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது என இரு நடிகர்களின் ரசிகர்களும் கொஞ்சமும் சளைக்காமல் மோதி வருகின்றனர். இதற்கிடையில், ‘வாரிசு’ படத்தைவிட ‘துணிவு’ படத்திற்குத்தான் தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக முன்னதாக சர்ச்சை எழுந்தது.

image

‘துணிவு’ பொங்கலா? ‘வாரிசு’ பொங்கலா?:

ஏனெனில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ‘துணிவு’ படத்தை வெளியிடுவதால், அந்தப் படத்திற்கு மட்டும் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு கூட தமிழ்நாட்டில் வசூலில் நம்பர் 1 நடிகர் விஜய் என்பதால், அவருக்கு கூடுதலாக திரையரங்கு காட்சிகள் ஒதுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். மறைமுகமாக ‘துணிவு’ படத்திற்கு திரையரங்குள் அதிகளவில் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்ததாகக் கருத்து கூறப்பட்டது.

இது அஜித் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அளித்திருந்தப் பேட்டியில் “உறுதியாக இரண்டுப் படங்களுக்கும் சமமான திரைகள் தான் ஒதுக்கப்படும். அதேபோல் முதல் வாரம் எந்த மாற்றமும் இருக்காது. படம் நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் முதல் வாரம் எந்த திரையரங்கில் என்னப் படம் ஓடுகிறதோ அதை அப்படியே தொடர வேண்டும் என்ற கன்டிஷனுடன் தான் படமே கொடுக்கிறார்கள். அதனால் படம் நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் முதல் வாரம் அதையே ஓட்டியாக வேண்டும். அதனால் மாற்றம் இருக்காது” என்று தெரிவித்திருந்தார்.

துணிவு ட்ரெய்லர் Vs  வாரிசு ட்ரெய்லர்:

இதற்குள் இரண்டு நடிகர்களின் படங்களின் ட்ரெய்லர் வெளியானது. இதில் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் (24 மணிநேரத்தில் 24.96 மில்லியன் வியூஸ்) , ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லருக்கு (24 மணிநேரத்தில் 23.05 மில்லியன்) குறைந்த அளவே வரவேற்பு கிடைத்தது. வழக்கமான குடும்ப சென்டிமென்ட்டுடன் ‘வாரிசு’ படம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதேநேரத்தில் ‘துணிவு’ ஆக்ஷன் அதிரடியுடன் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திரைத்துறை வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா ‘இந்தியா டுடே’ வுக்கு அளித்துள்ளப் பேட்டியில், ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ படத்துக்கு சமமான திரைகள் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “ரெட் ஜெயண்ட் நிறுவனம் ‘துணிவு’ படத்தை வெளியிடுவதால், அவர்கள் கை தான் ஓங்கி உள்ளது. பொதுவெளியில், சமமான திரைகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மை வேறுவிதமாக உள்ளது.

துணிவுக்கு அதிக திரையரங்குகள்:

தமிழகத்தில் மொத்தம் 9 விநியோகப் பகுதிகள் உள்ளன. 9 ஏரியாக்களில், 4 பகுதிகளில் (திருச்சி, சேலம், மதுரை மற்றும் நெல்லை) ‘வாரிசு’ படத்தின் உரிமை எம்.ஜி. (குறைந்தபட்ச உத்தரவாதம்) அடிப்படையில் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் கை ஓங்கி இருப்பதால், மீதமுள்ள 5 பகுதிகளில் (சென்னை நகரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு) ‘துணிவு’க்கு அதிக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் உள்ள முக்கிய திரையரங்குகள் இரண்டுப் படங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள மற்ற நகரங்களிலும் அதிகம் அறியப்படாத திரையரங்குகளில் ‘வாரிசு’ படத்தைவிட ‘துணிவு’க்கு அதிக திரைகளை ஒதுக்கியுள்ளதைக் காணலாம்.

இந்த ஒதுக்கீடு காரணமாக ‘வாரிசு’ படத்தைவிட, ‘துணிவு’ படத்திற்கு முதல் நாளில் அதிக ஓப்பனிங் கிடைக்கலாம். எனினும், இரண்டு, மூன்று ஷோக்கள் முடிந்தப் பிறகுதான் உண்மையில் யார் வெற்றிபெற்றது என்பது தெரியவரும். தெலுங்கு மார்க்கெட்டைப் பொறுத்தவரை அஜித்தின் ‘மங்காத்தா’ படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததுப்போன்று, ‘தெகிம்பு’ படத்திற்கும் ( நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதால்) வரவேற்பு கிடைத்துவிட்டால் ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல்தான். மேலும், ‘துணிவு’ வெளியாகி 3 நாட்கள் கழித்துதான் ‘வாரிசு’ வெளியாவதும், ‘துணிவு’ படக்குழுவுக்கு சாதகம்தான்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பிசினஸ்:

கேரளாவைப் பொறுத்தவரை விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால், ‘வாரிசு’ படம் அங்கு அதிக வசூல் கிடைக்க வாய்ப்பு உண்டு. கர்நாடகாவைப் பொறுத்தவரை இரு நடிகர்களின் படங்களுக்கும் நேரடிப் போட்டி உள்ளது. பிரிட்டனில் ‘வாரிசு’ படமும், அமெரிக்காவில் ‘துணிவு’ படமும் வெளியீட்டிற்கு முந்தைய விற்பனையில் முந்தியுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் ‘வாரிசு’ படத்துக்குத்தான் மவுசு உள்ளது.

image

image

image

வட இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது தென்னிந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்வு கிடைத்து வருகிறது. ‘துணிவு’ படம், வட இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் தமிழிலேயே வெளியாகிறது. ‘வாரிசு’ இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் வட இந்தியாவில் ‘வாரிசு’ பொங்கலா, ‘துணிவு’ பொங்கலா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.