சமோலி: ஜோஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற்படும் பகுதி என அறிவிக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
இதுகுறித்து சமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்சு குரானா இன்று கூறுகையில், “ஜோஷிமத் பகுதி பேரிடர் ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஜல்சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட மத்திய அரசின் இரண்டு குழுக்கள் இங்கு வர இருக்கிறது. ஜோஷிமத், அதன் சுற்றுப்புற பகுதிகளில் கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.தேவையானவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. தேவையான பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது” என்று கூறினார்.
இதற்கிடையில், ஜோஷிமத் நகரத்தில் 603 கட்டிடங்களில் தொடந்து வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும், மொத்தம் 68 குடும்பத்தினர் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கையில், “பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படி, மறுஉத்தரவு வரும் வரை, ஹோட்டல் மவுண்ட் வியூ, மலாரி இன் ஆகிய இரண்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுளன. ஜோஷிமத் பகுதியில் தற்போது 229 அறைகள் மட்டுமே தற்காலிகமாக தங்குவதற்கு தகுந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 1271 பேர் தங்க முடியும்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 33, 34-ன் படி, உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை, தேசிய அனல் மின் நிறுவனத்தின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், எல்லை சாலை அமைப்பால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஹோ ஹரே ஹெலாங் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும், ஜோஷிமத் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப்பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித நகரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கான காரணங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. தேசிய அறிவியல் மையத்தின் (ஐஎன்எஸ்ஏ) ஓய்வு பெற்ற விஞ்ஞானி டிஎம் பானர்ஜி, “நீர்மின் திட்டப்பணிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள், சுரங்க கட்டுமானங்களுமே இந்த சிக்கலுக்கான காரணங்கள். ஜோஷிமத் – ல் உள்ள பாறைகள் கேம்பிரியன் காலத்திற்கு முந்தையவை. அந்த இடம் நில அதிர்வு பகுதி 4-ஐ சேர்ந்தது. இவைகள் தவிர 3,4 மாடிகள் கொண்ட பெரிய வீடுகள் இந்த பகுதிகளில் கட்டப்படக்கூடாது” என்று தெரிவித்தார்.
பின்புலம் என்ன? – உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம், பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலாகும். வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் ஜோஷிமத் நகரில் உள்ளன. சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவன கட்டிடங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.
ஜோஷிமத் நகர பிரச்சினை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். முக்கிய சாலை, கட்டிடங்களில் நாளுக்கு நாள் விரிசல்கள் அதிகமானதால் விஷ்ணுகாட் நீர்மின் நிலைய திட்டப் பணிகள், சார் தாம் நெடுஞ்சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டன. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விடுதி, ஓட்டல், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மாநிலஅ ரசு சார்பில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஜோஷிமத் நகர பிரச்சினை குறித்து மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஜோஷிமத் நகரின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் தாமி எடுத்துரைத்தார். நகரில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டது குறித்தும், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நீண்டகால திட்டங்கள் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி விவரித்தார். அப்போது, ஜோஷிமத்நகரின் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
இதனிடையே ஜோஷிமத் நகரம் குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையில் காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் கேபினட் செயலாளர், தேசிய பேரிடர் மீட்புப் படை உயரதிகாரிகள், உத்தராகண்ட் மூத்த அதிகாரிகள், ஜோஷிமத் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜோஷிமத் நகரில் உள்ள ஜோஷி மடத்தின் சார்பில் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். “ஜோஷிமத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். சுற்றுச்சூழல், மனித வாழ்வை அழிக்கும் வளர்ச்சி திட்டங்கள் தேவையில்லை. அரசு திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.