“தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும் போட்டியிடாது” என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்திருக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிவகாசியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. தமிழகத்திற்கு யாரால் நன்மைக்கு கிடைக்கும் என்பதை ஆராய்ந்து தேமுதிக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும்.
தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு தேர்தலுக்கு பின்பு ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது திராவிட மாடல் திமுக அரசு. பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக ஆட்சியின் போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், அதிமுக வழங்கிய 2 ஆயிரம் ரூபாயை வழங்கிட வேண்டும்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய சக்தியாக வளர முயற்சி செய்கிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியும்.
மத்திய மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்கவில்லை என்றால். தேமுதிக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும். எழுதாத பேனாவை வைத்து ரூ.80 கோடி செலவில் கலைஞர் நினைவகம் அமைப்பதை எந்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM