’நான் மட்டும் கல்லூரியில் படித்திருந்தால்’.. கௌதம் அதானி பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி!

”முறையாக கல்வி பயின்றிருந்தால், அது தமக்கு உதவியிருக்கும்” என்று இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் அதானி குழுமத் தலைவருமான கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
இவர், உலகின் பணக்கார பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். விரைவில் ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க்கின் இடத்திற்கு வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. எலான் மஸ்க் தற்போது 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குஜராத்தில் வித்யா மந்திர் அறக்கட்டளையின் 75வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கெளதம் அதானி கலந்துகொண்டார்.
image
இதில் பேசிய அவர், “எனக்கு 16 வயது இருந்தபோது, படிப்பைக் கைவிட்டு குஜராத்திலிருந்து ரயில் ஏறி மும்பைக்குச் சென்றேன். ஆரம்பத்தில் தாம் வைரங்களை வகைப்படுத்த கற்றுக் கொண்டேன். அதன் பிறகு வைர வியாபாரத்தில் இறங்கினேன். அப்போது, ஒரு ஜப்பானியரிடம் வைரத்தை வியாபாரம் செய்தபோது எனக்கு பத்தாயிரம் ரூபாய் கமிஷன் கிடைத்தது. அது, இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
இந்தத் தொழிலை விரைவிலேயே கற்றுக் கொண்டதால், அதன்மூலம் அறிவு பெற்றேன். முறையாக கல்வி பயின்றிருந்தால், அது நீண்டகாலத்திற்குத் தமக்கு உதவியிருக்கும் என்று தற்போது எண்ணுகிறேன். கல்லூரிக்குச் செல்லவில்லையே என்று அடிக்கடி நான் எண்ணுவது உண்டு.
image
என் வாழ்க்கையில் கல்லூரிக் கல்வியை நான் பெற்றிருந்தால் இன்னும் கொஞ்சம் பயனடைந்திருப்பேன். முறையான கல்வியே, ஒருவரின் அறிவை வேகமாக விரிவுபடுத்துகிறது என்பதை இப்போது உணர்கிறேன். அறிவைப் பெறுவதற்கு, ஒருவர் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நான் கல்லூரிக்குச் சென்றிருந்தால் இன்னும் வேகமாய் முன்னேறி இருப்பேன்.
நான் மட்டும் கல்லூரிப் படிப்பை முடித்து இருந்தால் என் அனுபவம், புத்திசாலித்தனம், கல்வி அறிவு ஆகியற்றோடு இன்னும் அதிக திறமையை வளர்த்து வேகமாய் முன்னேறி, இப்போது உள்ள இடத்தை பத்து வருடத்துக்கு முன்பே அடைந்திருப்பேன்” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.