தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆட்சியர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள், விசாரணைக்காக உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு, தீர்வு காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோவில்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், கடந்த 2-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனு, உரிய துறையினருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்டுவந்த நிலையில், மனு உரிய விசாரணை மேற்கொள்ளப்படாமல் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சுப்பிரமணியனும், அவர் மனைவியும் மாற்றுத்திறனாளிகள். அதனால் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. அதில் வீடுகட்டி இருவரும் கடந்த 30 வருடங்களாகக் குடியிருந்துவருகிறார்கள். அவர்களின் வீட்டின் அருகிலுள்ள பொதுப்பாதையை மங்கையம்மாள் என்பவர் போலிப் பத்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துகொண்டதாக சுப்பிரமணியன் குற்றம்சாட்டுகிறார். இந்தப் பிரச்னை தொடர்பாக அவர் கடந்த 2-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனு அளித்திருக்கிறார்.
அவரின் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அது குறித்து விசாரித்து 15 தினங்களில் நடவடிக்கை எடுக்குமாறு அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதனால் தனக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுப்பிரமணியன் வீடு திரும்பச் சென்றபோது, அவரைத் தொலைபேசியில் அழைத்த ஒருவர், ”உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் இந்த செல்போன் நம்பரை எழுதிய மனு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் கிடந்தது. அதை வந்து வாங்கிச் செல்லுங்கள்” என அழைத்ததால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அது, தான் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனு என்பது தெரியவந்தது. ஆட்சியர் அலுவலக சீல் மற்றும் எந்தத் துறைக்கு விசாரணைக்கு அனுப்பப்படுகிறது என்பதை சிவப்பு மையால் எழுதிக் கையெழுத்திட்ட மனு என்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். தன் மனு கேட்பாரற்று சாலையில் கிடந்தது குறித்து இன்று அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டார்.
மாற்றுத்திறனாளி, ஆட்சியரிடம் அளித்த மனு சாலையில் வீசப்பட்ட சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக அது குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “சுப்பிரமணியன் அளித்த மனுவை, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருந்தேன். அந்த மனு சாலையில் கிடந்தது எப்படி என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.