இந்தூர்: ‘அந்நிய நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களே நம்முடைய தேச தூதர்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் தேதி ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நகரில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நேற்று நடந்தது.
மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை இந்த தேசத்தின் தூதர்களாகத்தான் நான் கருதுகிறேன். யோகா, ஆயுர்வேதம், குடிசைத் தொழில், கைவினைப் பொருட்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகிய அனைத்திற்கும் நீங்கள்தான் விளம்பர தூதர்களாக இருக்கிறீர்கள். அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலத்தில் இந்தியா நுழையும் நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் தனித்துவமான உலகளாவிய பார்வை மற்றும் உலகளாவிய கொள்கைகளில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பு உங்களால் பலப்படுத்தப்படும்.
இந்தியாவில் இன்று திறமையான இளைஞர்கள் பலர் உள்ளன. நமது இளைஞர்களுக்கு திறமையும், மதிப்பும், நேர்மையும் உண்டு. இதனால், அறிவு மையமாக மாறுவது மட்டுமின்றி, உலக வளர்ச்சியின் இயந்திரமாக மாறும் திறனையும் இந்தியா பெற்றுள்ளது. இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் இந்திய புலம்பெயர்ந்தோர் அசாதாரணமாக பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் சாதனைகளை நாம் ஆவணப்படுத்த வேண்டும்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. இதன் மூலம் இந்தியாவைப் பற்றி நாம் உலகிற்கு எடுத்துரைக்க முடியும்.
கடந்த சில ஆண்டாக இந்தியா படைத்த சாதனைகள், அடைந்த முன்னேற்றங்கள் அசாதாரணமானவை. இதனால் முழு உலகமும் இந்தியாவை இப்போது உற்று நோக்குகிறது. எனவே, நம் தேசத்தின் கலாச்சார, ஆன்மீக அறிவையும், வளர்ந்து வரும் திறன் மற்றும் முன்னேற்றத்தை பற்றியும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் உலகெங்கிலும் பகிருங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிய அரசு நிறைவேற்றித் தரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக தென் அமெரிக்க நாடான சுரிநாம் அதிபர் சந்திரிகா பெர்சாத் சந்தோகி, கயானா அதிபர் முகமது இர்பான் அலி பங்கேற்றனர்.