பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது ஜோஷிமடம்! மக்களை வெளியேற்றும் அரசு

நியூடெல்லி: இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று. இந்தியாவின் பாரம்பரிய ஆன்மீக இடங்களில் முக்கியமான ஒன்றான பத்ரிநாத் கோயில் புனித யாத்திரைக்கு செல்பவர்கள், ஜோஷி மடத்தின் வழியாகத் தான் செல்லவேண்டும். இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், இது மிகவும் முக்கியமான இடமாகும். 

பாரம்பரிய சிறப்பு பெற்ற ஜோஷிமடம் அமைந்திருக்கும் பகுதி, ’பேரிடர் அபாயம்’ உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத் கோவிலில் வீற்றிருக்கும் பத்ரி நாராயணன் 6 மாத குளிர் காலத்தின்போது, ஜோஷ்மடத்தில் உள்ள ஆலயத்தில் வந்து தங்குவார். தீபாவளி முதல் சித்ரா பௌர்ணமி வரை பத்ரி நாராணயர் தங்கும் திருத்தலம், தற்போது பேரிடம் அபாய வளையத்தில் வந்துவிட்டது. 

பனிக்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் போது, கோயிலிலுள்ள முக்கிய தெய்வச் சிலைகளை, தீபாவளி முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோயிலினுள் வைத்து வழிபடுவது வழக்கம். ஜோஷி மடத்தில் உள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் நம்பப்படுகிறது. ஆதி சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் கீழ், பத்ரிநாத் கோயில் உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஜோஷிமடத்தில் உள்ள கட்டிடங்களிலும், சாலைகளிலும் திடீரென சில நாட்களாக விரிசல்கள் அதிகரித்து வருகிறது. விரிசல் அதிகரித்து வருவதை முன்னிட்டு, ஜோஷி மடம் அமைந்திருக்கும் பகுதி, “பேரழிவு ஏற்படக்கூடிய” பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், நகரம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் இரண்டு குழுக்கள் ஜோஷிமத் சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளதாக சாமோலி மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குரானா தெரிவித்தார்.

“ஜோஷிமட் பகுதி பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் ஒரு குழு உட்பட மத்திய அரசின் இரண்டு குழுக்கள் இங்கு வருகின்றன. ஜோஷிமட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் ரேஷன் கிட்கள் விநியோகிக்கப்படுகின்றன” என்று சாமோலி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

சமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜோஷிமட் நகரில் இதுவரை 603 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 68 குடும்பங்கள் ‘தற்காலிகமாக’ இடம்பெயர்ந்துள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 33 மற்றும் 34 பிரிவுகளின் கீழ், அதிக நிலச்சரிவுகள் மற்றும் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  NTPCயின் தபோவன் விஷ்ணுகாட் நீர்மின்சாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (பிஆர்ஓ) ஹோ ஹரே ஹெலாங் பைபாஸ் கட்டுமானப் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்களுக்குத் தேவையான உதவித் தொகையை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது. புனித நகரத்தில் வெளிப்படையான சரிவுக்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், நீர்மின் திட்டத்திற்காக சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைப்பதில் நிலவும் சூழ்நிலைகளே இதற்குக் காரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.