ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல் என்கிற வார்த்தையை உச்சரிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திராவிட மாடல் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர் , காமராஜர் , அண்ணா, கலைஞர் பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்துள்ளார். அத்துடன் சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம் , பெண் உரிமை , மத நல்லிணக்கம் ஆகிய வார்த்தைகளையும் விட்டுவிட்டு அவர் உரையை படித்திருக்கிறார். குறிப்பாக ‘சட்டம்-ஒழுங்கு சிறப்பாக நிலை நாட்டுவதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது’ என்கிற வாசகத்தையும் ஆளுநர் தவிர்த்து உள்ளார். இது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “தமிழ்நாடு அரசின் குறிப்பு அறிக்கையை ஆளுநர் படிக்க வேண்டியது அவரது பொறுப்பு. ஆளுநர் ஆங்கிலத்தில் படிப்பதை, பின்னர் பேரவை தலைவர் தமிழில் படிப்பார். இதுதான் சட்டபேரவையின் மரபு.. அமைச்சரவை தயாரித்து கொடுத்த கொள்கை அறிக்கையை அப்படியே முழுமையாக வாசிக்க வேண்டும் என்பது ஆளுநரின் பொறுப்பும் கடமையும். நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு ஆளுநரும் செய்யாத ஒரு தீஞ்செயலை ஆளுநர் ரவி செய்திருக்கிறார். இது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது. தனக்கு வேண்டியதை வாசிப்பது; வேண்டாததை விட்டுவிட்டு புறக்கணிப்பது ஆகிய செயல்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.
ஆளுநரைக் கண்டித்து இதே பேரவையில் தீர்மானம் போட வேண்டும். இப்படி அமைச்சரவையின் குறிப்பை விட்டுவிட்டு படிப்பது ஆளுநரின் வரம்புக்கு மீறிய செயல். இது மிக மிக கடுமையான கண்டனத்திற்குரியது. இது ஒரு கட்சியின் பிரச்சனை அல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்குமானது; அந்த கட்சி களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்குமேயானால், இதற்கு கடுமையான முறையில் தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். ஆளுநர் இவ்வாறு செயல்பட்டதற்கு தமிழ்நாடு மக்களிடம் பகிரங்கமாக, உடனடியாக , நிபந்தனையற்ற முறையில் மன்னிப்புக் கோர வேண்டும். அவர் நினைப்பதெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்க முடியாது; அப்படி மன்னிப்பு கோரவில்லை என்றால், கடுமையான எதிர்விளைவுகளை ஆளுநர் சந்திக்க வேண்டிய நிலைமை நிச்சயமாக ஏற்படும். ” என்று தெரிவித்தார்..