மிஸ்ஸான வார்த்தைகள்… கோபத்தில் ஸ்டாலின்… வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து கொடுத்த வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திராவிட மாடல் என்ற வார்த்தையை இரண்டு இடங்களில் தவிர்த்து விட்டார். மேலும் மத நல்லிணக்கம் உள்ளடங்கியை பகுதியை தவிர்த்துள்ளார். இதுதவிர ”சமூக நீதியையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழ் ஆகும்” என்ற வரியை முழுமையாக தவிர்த்து விட்டார். சுய மரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட பகுதிகளை ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இதையடுத்து தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போது ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்த பின்னரே ஆளுநர் வெளியேறுவார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தால் கோபத்தில் பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.