மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை வரும் தேர்தலில் இணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளை யார் ஒருங்கிணைப்பது என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. ஒருபுறம் மம்தா பானர்ஜியும், மற்றொரு புறம் சந்திரசேகர் ராவும் எதிர்க்கட்சித்தலைவர் அந்தஸ்தை பெற முயன்று வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார். தற்போது ராகுல் காந்தியால் எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்க முடியும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய சரத் பவார், “ராகுல் காந்தி கடினமாக உழைக்கக் கூடியவர் என்பதை நிரூபித்திருக்கிறார். மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பற்றிய எண்ணம் மாறியிருக்கிறது. எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்ட ராகுல் காந்தி உதவுவார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை ஆளும் கட்சி ஆரம்பத்தில் இருந்தே கிண்டல் செய்து வருகிறது. ராகுல் காந்தியின் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாஜக-வுக்கு பாரத் ஜோடோ யாத்திரை பதிலளித்துள்ளது. ராகுல் காந்தி கடினமாக உழைக்க தயாராகிவிட்டார். ஏனென்றால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்வது சாதாரண காரியம் கிடையாது. ஆனால் அவர் அதை செய்கிறார்.
எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இது உதவும் என்பது எனது கருத்து. ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியுடன் நின்றுவிடவில்லை. அந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றுபவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டதால் பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பையும், அனுதாபத்தையும் பெற முடிந்தது” என்று தெரிவித்தார்.
மேலும், “மகாராஷ்டிராவில் வரும் மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் மகாவிகாஷ் அகாடி இணைந்து போட்டியிடும். இதற்காக காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை ஓரணியில் கொண்டு வருவோம். ஆனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எந்த ஒரு முடிவையும் மகாவிகாஷ் அகாடி இணைந்துதான் எடுக்கும். மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்கும் என்று நினைக்கவில்லை. வேறு சில கட்சிகளும் எங்களது கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அதனை இணைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
சரத் பவாரின் கருத்தை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலாசாஹேப் தோரட் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “எதிர்க்கட்சிகளின் நோக்கம் பாஜக அரசை அகற்றுவதுதான். நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு இதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. பாஜக அரசை அகற்ற ராகுல் காந்தி முக்கிய பங்காற்றுவார். ஜோடோ யாத்திரையில் நாடு முழுவதும் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலின் போது மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 45 தொகுதிகளையும், சட்டமன்ற தேர்தலில் 145 தொகுதிகளையும் பெறவேண்டும் என்ற இலக்கோடு பா.ஜ.கட்சி இப்போதே களத்தில் இறங்கி பணியாற்றத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இதற்காக அக்கட்சியின் தலைவர் நட்டா மகாராஷ்டிராவுக்கு வந்து சென்று இருக்கிறார். இம்முறை சரத்பவாரின் பாராமதி மக்களவைத் தொகுதிக்கும் பாஜக குறி வைத்திருக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு சில தொகுதிகளை மட்டும் கொடுத்துவிட்டு மற்ற அனைத்து தொகுதியிலும் போட்டியிட பாஜக திட்டமிட்டு வேலை செய்து வருகிறது என்பதும் தகவல்.