புதுடில்லி, ஓ.ஆர்.ஓ.பி., எனப்படும், ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய நிலுவை தொகையை அளிக்க, மார்ச் 15 வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராணுவத்தினருக்கான, ஓ.ஆர்.ஓ.பி., எனப்படும், ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிவித்தது. ‘இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது.
இதை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கும்படி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு வகுத்த திட்டத்தை உறுதி செய்தது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற, 25 லட்சம் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய நிலுவை தொகையை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
இதற்கு கால அவகாசம் அளிக்கும்படி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ”நிலுவை தொகை பெறுபவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியை ராணுவ கணக்கு தணிக்கை அதிகாரி முடித்துள்ளார்; அவை ராணுவ அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 15 முதல், பயனாளர்களின் கணக்குகளில் நிலுவை தொகை வரவு துவங்கும்,” என, அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள், நிலுவை தொகை வழங்குவதற்கான கால அவகாசத்தை, மார்ச் 15 வரை நீட்டித்துஉத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில், இரண்டாம் முறையாக கால அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement