சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கசுவரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று தலை வெட்டப்பட்ட நிலையில் பாதி உடல், தண்ணீரில் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மிதந்த தலை, பாதி உடல் ஆகியவற்றை மீட்டனர். மேலும், பாதி உடல், கை, கால் ஆகியவற்றை அப்பகுதியில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டவர், தாரமங்கலம் அருகே உள்ள பெரியசோரகை கிராமம் சீரங்கனூரைச் சேர்ந்த லாரி டிரைவர் மணி (53) என்பது தெரியவந்தது.
டிரைவர் மணிக்கு சரஸ்வதி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மணியை கொலை செய்த கும்பல், தலை, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதனை கிணற்றில் வீசி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மணியின் மாயமான இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி மற்றும் கைகளை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கிணற்றில் உள்ள தண்ணீர் நேற்றிரவு வெளியேற்றப்பட்டது. பின்னர் கிணற்றினுள் கிடந்த மணியின் கைகள், மாயமான இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் அனைத்தையும் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.
தொடர்ந்து அவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மணியை எதற்காக கொலை செய்தனர்? முன்விரோத தகராறில் நடந்ததா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்ததா எனவும் வேறு எங்கேயாவது கொலை செய்து விட்டு பின்னர் உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி கிணற்றினுள் வீசிச்சென்றனரா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே போலீசாரின் பிடியில் 3பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.